Tuesday, September 19, 2017

ஆதியோகி - ஒரு வனத்திருடன் - 2

ஒரு பொத்தம்பொதுவாக வாசுதேவனின் ஆதியோகி சிலை திறப்பின் போது அவன் செய்ததை மேலோட்டமாக பேசியிருந்தேன்.

https://vivekravichandran.blogspot.in/2017/02/blog-post_21.html

தற்போது நான் கண்ட நேரிடை காட்சிகளும், அங்குள்ள பணியாளர்களிடம் நடத்திய விவாதமும் நடப்பவற்றை ஆழமாக உணரவைத்துள்ளது.

மூன்று நாள் விடுமுறை என்றவுடன் அம்மா ஆன்மீக பயணத்துக்கு குழி வெட்டி விதை தூவி தயாராக இருந்தார். மருதமலை, ஈஷா, கோவை குற்றாலம், பழனி இவைதான் தீர்மானிக்கப்பட்ட தளங்கள். இதில் கோவை குற்றாலம் நான் அடம் பிடித்து இணைத்த திடீர் தளம். பயணப்படுதல் என் ஆஸ்தான பொழுதுபோக்கு என்பதால் புறப்பட்டு விட்டேன். இயற்கையே பொறாமை கொள்ளும் வெள்ளியங்கிரி மலை மேற்சொன்ன நான்கில், மூன்று தளங்களை அடக்கிவைத்துள்ளது.

மருதமலை செல்லும் வழியிலேயே கொஞ்சம் கடுப்பாகத்தான் இருந்தது. விவசாயக் கல்லூரி, பாரதியார் பல்கலை, காருண்யா போன்று எங்கு திரும்பினும் கட்டிடங்கள். இதில் பல் கொறிக்க வைத்தது காருண்யா தான், எவ்வளவு இடத்தை வளைத்திருக்கிறார்கள், எவ்வளவு வன அழிப்பு. சரி அது வேறு கதை.

மருதமலை முடித்து ஈஷா சென்றோம். குதிரைலாட வடிவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பரவலாக ஒரு 700 ஏக்கர் நிலத்தில் உள்ளது ஈஷா. நிச்சயம் காட்டையே சுரண்டியுள்ளான் . இதற்க்கு ஈடாய் 7லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். 1000 மரங்கள் வளர்ந்திருந்தாலே ஒரு சிறிய வனம் உருவாகியிருக்கும். 7 லட்சம் எனில் ஒரு அமேசான் மலைக்காட்டையே உருவாகியிருக்கலாம். ஆனால் பறந்து விரிந்த அந்த பரப்பில் கிட்டத்தட்ட 150 மரங்கள் இருந்தன, அதில் சில தென்னை மரங்கள்.

இந்த மையத்தை அவன் ஆரம்பித்த நோக்கம் என்ன? யோகா கலையை பரப்பத்தானே? ஆனால் காணும் இடமெங்கும் பாம்பு சிலைகள். அதை வழிபடாமல் செல்ல இயலாதவாறு பாதையமைப்புகள். உள்ளே சென்றால் மக்களை ஈர்க்கும் வண்ணம் அனைத்து வேலைப்பாடுகளும் உள்ளது. பொதுவாக உள்ள ஒரு கடவுளை முன்னிறுத்தினால் பல முரண்பாடுகளை சந்திக்க நேருமென்று தன்னையே கடவுளாக்கிக்கொண்ட தியாகிதான் இந்த சத்குரு. அவன் பாதத்தை வழிபட்டால் மோட்சம் வந்து சேறுமாம், தியானலிங்கத்தில் ஆசி பெற்றவர்கள் மோட்சமடைவார்கள் என்றெல்லாம் மக்களை நம்ப வைக்கிறார்கள்.


தியான லிங்கத்தை கடந்து உள்ளே செல்லாமல் சென்ற என்னிடம் சண்டையிட்டார்கள் பணியாட்கள். அப்போது தான் தெரிந்தது அவன் கொள்கைகளை போதிக்க ஒரு அமைதியான இடம் தேவைப்படுகிறது. அலைபாய்ந்த மனதில் எவ்வளவு போதித்தாலும் சொல்லும் கருத்து ஆழ்மனதில் சென்று சேர்வதில்லை. எனவே இந்த தியானலிங்கம் மூலம் நம் மனதை ஈர்த்து, பின் அவனையும் ஈர்க்க வைக்கிறான்.

இவை அனைத்திற்கும் மேலாக ஆதியோகி சிலை. அதை பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதன் நோக்கம் அறிந்தவர்கள் எனக்கு போதிக்கவும். காணும் இடமெங்கும் கடைகள், அனைத்திலும் மூலிகை, இயற்கையை மையமாக வைத்து வாய்க்குள் செல்லா பெயர்களை இட்டுள்ளான். காட்டை உருவாக்குகிறேன் என கூறுபவனே 6 ரூபாய்க்கு செடி விற்கிறான், காலக்கொடுமை.

அறிய கலைகள் பலவும் ஆன்மீகத்தால் சூழப்பட்டுள்ளது, ஆன்மிகம் மூடநம்பிக்கைகளால் சூழப்பட்டுள்ளது. நல்லது தீயது எது என்று பகுத்தறிந்தால் மட்டுமே தன் தேவைகள் எதுவென்று விளங்கும். இல்லையேல் இது போல நவீன சாமியார்கள் உங்களை ஏமாற்றி சுரண்டிக்கொண்டேதான் இருப்பார்கள். மொத்தத்தில் ஜக்கி ஒரு வீணாக்கப்பட்ட.....

Wednesday, September 6, 2017

Gauri Lankesh படுகொலை

இந்தியாவை பற்றி பேசும்போது, இது ஜனநாயக நாடு என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகம் என்பது தனிமனிதனுக்கு முழு உரிமையுள்ள நாடு, இங்கே கருத்து சுதந்திரம் உண்டு. விமர்சனம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், யாரைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த சட்ட மன்ற உறுப்பினரை, மந்திரியை, முதல்வரை, பிரதமரை என எவரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கும் முழு உரிமை அனைத்து மக்களுக்கும் உண்டு.

ஆனால் இந்த 10 முறை பிறந்த புதிய இந்தியாவில் கேள்வி கேட்பவர்களை Anti-Indian என்கிறார்கள் சங்கிமங்கீஸ். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தேசியக்கொடியை புறக்கணித்து காவி கோடி ஏற்றிய RSS இந்நாட்டை காக்க வந்த இந்தியர்கள் என தன்னை கூறிக்கொள்கிறது, ஆனால் அதே கும்பல் CRPF மற்றும் இராணுவத்தினரை விரட்டியடிக்கும் காட்சிகளை கண்டிருப்பீர்கள். RW விமர்சித்தவர்கள் கொலை செய்யப் படுகிறார்கள்.


ஒரு சில படங்களில் நீதிமன்ற காட்சிகள் கண்டிருப்பீர்கள், அது குற்றவாளிக்கு சாதகமாக அமையும். கொலையாளி/குற்றம் சுமத்தப்பட்டவர்களை அவர்களது வக்கீல்கள் "கணம் நீதிபதி அவர்களே குற்றம் நடந்த அன்று என் கட்சிக்காரர் இந்த ஊரிலேயே இல்லை, அன்று அவர் வெளியூர் சென்றுவிட்டார். அதற்கான ஆதாரமாக அவர் தங்கியிருந்த விடுதியின் ரசீதும், உணவகத்தின் ரசீதும் என்னிடம் உள்ளது" என அழகாக வாதாடி, அந்த குற்றவாளியை வெளியே கொண்டுவருவார்கள். தற்போது யார் வெளியூர் சென்றிருக்கிறார்கள் என அனைவருக்கும் தெரியும்.
எனவே யாரை காப்பாற்ற நீங்கள் ஆட்சியை நடத்துகிறீர்கள், மக்களையா? அல்லது கொலையாளிகளையா?

மக்களுக்காக அமைக்கப்பட்ட சட்டமும், அரசும் மக்களுக்கு எப்படி எதிரியாக இருக்க முடியும்? அரசிடம் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளத்தான் மக்கள் பாடுபட வேண்டியுள்ளது.
#GauriLankesh தொடர்ந்து இந்துத்துவா மற்றும் கேடி அரசை விமர்சித்து வந்தார் என்பது அனைவரும் அறிந்தது. ஒரு ஊடகவியலாளருக்கே கேள்வி கேட்க உரிமை இல்லை என்றால், கடைநிலை மக்களின் நிலை என்ன என யோசிக்கவே பதறுகிறது. "நான் எப்போது வேண்டுமானாலும் சுடப்படலாம்" என அடிக்கடி கூறியவர், தான் சாகப்போகிறேன் என தெரிந்தே வாழ்திருக்கிறார்.

தொடர்ந்து அரசை விமர்சிப்பவர்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டே உள்ளனர். ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது, பாஜக தனுக்கு தானே மிகப்பெரிய புதைகுழியை தோண்டிக்கொண்டுள்ளது. விரைவில் வீழும்.

Tuesday, August 29, 2017

Spring, Summer, Fall, Winter... and Spring - உலகசினிமா ஒரு பார்வை


Bom yeoreum gaeul gyeoul geurigo bom(வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் மற்றும் வசந்தம்)

தென் கொரியாவின் தவிர்க்க இயலா இயக்குனராக உருவெடுத்திருக்கும் "கிம் டுக் கிம்" இயக்கியிருக்கிறார். ஒரு வசந்த காலத்தின் மாலையில் கையில் காப்பிக்கோப்பையுடன் காணவேண்டிய படம். முழு வாழ்க்கையை ஒரு சேர பார்வையிடுதல் போல் உள்ள காட்சியமைப்புகள் உயிரோட்டமுள்ளவை. படத்தின் காட்சிகள் அரங்கேறிய ஜூசஞ்சி ஏரி உங்கள் வறண்ட மனதில் பச்சையை நிரப்புகிறது.


இவ்விடத்தில் நாம் வாசித்தால் எப்படி இருக்கும் என அற்பமாய் நம் மனதுக்குள் தோன்றுமளவு அந்த இடத்தை இயற்க்கை தரிசித்துள்ளது. உண்மையில் அங்குள்ள பல நூறு வருடங்கள் கடந்த மரங்களின் தன்மையை பாதுகாக்க செயற்கையாய் அமைக்கப்பட்டுள்ளது அந்த ஏரி. படத்தில் காண்பிக்கப்படும் மரத்தாலான வீடு படத்திற்காக அமைக்கப்பட்டது.

5 பருவங்களாய் படத்தை பிரித்து, ஒவ்வொரு காலத்தின் முடிவிலும் பௌத்த கதைகளை வார்த்தைகளை விழுங்கி மௌனத்தால் சொல்கிறார் இயக்குனர். "காமம் மனிதனின் ஆசையை விழித்துக்கொள்ள வைக்கிறது, அதுவே கொலை செய்ய தூண்டுகிறது" என்பதை படத்தின் மைய கருத்தாக வைக்கிறார்.

மறு கரையில் உள்ள படகைக் கொண்டு எவ்வாறு அக்கரைக்கு துறவி வருகிறார், சீடனை கைது செய்துகொண்டு செல்லும்போது படகு நகராமல் நிக்க, துறவி கையசைத்ததும் நகர்தல் போன்றவற்றை தவ வலிமையில் எடுத்துக்கொள்வதா என தெரியவில்லை.

ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு உயிரினமும், அதனை உதவிக்கு கையாளும் விதமும் நுணுக்கம். இறந்த பிறகும் கூட துணியால் முகத்தை மூடிவரும் பெண்ணின் முகத்தை காட்டாதது, தான் செய்த பாவத்தை கழிப்பதற்காக மலை உச்சியில் தன்னை வருத்தி சீடன் வைத்த சிலை என தீர்மானமின்மையை நம்மிடம் கொடுத்துவிடுகிறார்.



உலகம் அதன் போக்கில் இயங்கினாலும் மனிதன் பாவம் செய்வதை நிறுத்த மாட்டான் என கதையை முடிக்கிறார்.

படத்தை மேலும் விலக்கினால் எதையுமே தவிர்க்க இயலாது. படத்தில் புல்பூண்டும் கதை சொல்கிறது, படமும் கதை சொல்கிறது.





#BomYeoreumGaeulGyeoulGeurigoBom #SpringSummerFallWinterandSpring #KimKi
duk


Saturday, August 26, 2017

சாமியார்கள் சல்லிப்பயல்கள்

மனித நாகரிகம் பல பரிமாணங்களை தாண்டி தற்போதுள்ள நிலைக்கு வந்துள்ளது. உடல்மறைத்து உடையணிவதில்லை நாகரிகம், நல்லது தீயது எது என பகுத்தறிதலே. இவ்வாறு பகுத்தறிவதற்கு படிப்பு அவசியமில்லை நமக்கு, கொடுக்கப்பட்ட பொதுவான ஆறாம் அறிவே போதும்.

நம் பரம்பரையில் உள்ள முன்னோர்களை நாம் வணங்குவது அனைவருக்கும் தெரிந்ததே, சற்று வயதானவர்களுக்கு நம் முன்னோர்களை வணங்குகிறோம் என தெரியும். குழந்தைகளுக்கோ யார் எவரென தெரியாமல், பெரியவர்கள் வணங்குகிறார்கள் என அவர்களை பின்பற்றுவார்கள். சில குழந்தைகள் ஆர்வமிகுதியால் யாரை வணங்குகிறோம் எனக்கேட்டால் "பேசாம சாமி கும்பிடு" என கட்டுப்படுத்திவிடுகிறார்கள். குழந்தையும் சாமி என எண்ணி கும்பிடுகிறது. இவ்வாறே இன்று நாம் வணங்கும் கடவுள்கள் உருவாகியுள்ளது.

இன்று பல கோடி லாபமீட்டும் தொழிலாக உருவெடுத்துள்ள இந்த பக்தி தொழிலில், நமக்கும் நாம் வேண்டுபவர்களுக்கும் இடையில் வந்தவர்கள் தான் இந்த சாமியார்கள். சிலர் உண்மையில் ஆசைகளை துறந்து சன்யாசியாகவோ/சாமியாராகவோ இருக்கிறார்கள், ஆனால் மற்றும் சிலரோ நித்தியானந்தா போலவோ பிரேமானந்தா போலவோ மகத்தான சல்லிப்பயலாக உள்ளனர். இவர்கள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடமிருந்து பணமோ, பொருளோ பிடுங்கிக்கொள்கிறார்கள். பெண்கள் என்றால் தன் ஆசைக்கு இணங்க வைக்கிறார்கள்.


#GurmeetRamRahimSingh இந்த பட்டியலில் இன்னுமொரு மகா மட்டமான சல்லிப்பயல், ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு தற்போது 15வருடங்கள் கழித்து, அவன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது(குறிப்பு 15 வருடங்கள் கழித்து). தன்னை கற்பழித்துவிட்டதாக ஒரு பெண், மொட்டை கடிதத்தை அப்போதைய பிரதமரான வாஜ்பாய்க்கு அனுப்பினார். அந்த கடித்தை தான் நடத்தி வந்த "பூரா சச்" என்ற பத்திரிக்கையில் #RamChanderChhatrapati வெளியிட்டார். வெளியிட்ட சில நாட்களில் அந்த சாமியாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் ராம் சந்தர்.

15 வருடங்களாக விசாரணை மட்டுமே நடத்தி காலதாமதம் செய்துவந்துள்ளது. பாஜகவால் மட்டும் தான் இப்படி ஒரு நிலையை தந்துவிட முடியும். நாட்டையும் நாட்டு மக்களையும் பின்நோக்கி செலுத்துகிறது பாஜக. தற்போது குற்றவாளி என தீர்ப்பு வெளிவந்த சில நிமிடங்களில் வன்முறை வெடித்து இதுவரை 30 உயிரை பறித்துள்ளது.மேற்கு வங்கத்தில் வருமான வரி சோதனைக்கு அவ்வளவு ராணுவத்தை அனுப்பதெரிந்த மத்திய அரசுக்கு இந்த கலவரத்தை கட்டுப்படுத்த ஒரு போலிஸையோ ராணுவத்தையோ அனுப்ப முடியவில்லை?
காவிகளும் பாஜகவும் ஒன்னுன்னு தெரியாதவனே மண்ணு தான். மோடிக்கு வாக்களித்த நீங்கள் ஒவ்வொருவரும் குற்ற உணர்ச்சியில் மூழ்கும் நேரமிது.

Thursday, August 10, 2017

நாளை மற்றுமொரு நாளே


மனிதனை பற்றி கூறவேண்டுமென்றால் "மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" என கூறிய ஜி.நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே" ஒரு சராசரி மனிதனின் ஒரு நாளை அழகாய் சித்தரிக்கிறது.

பாலுணர்வுடன் வாழ்க்கையை அழகாக எடுத்துரைக்க இயலும் வெகுசில எழுத்தாளர்களில் நாகராஜனும் ஒருவர் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
 


நாகராஜனின் கதாப்பாத்திரங்கள் அவர்களாக இருக்கிறார்கள், மனிதனின் போலி முகங்களை கிழித்தெறிகிறார்கள், முகத்தில் தோன்றும் வேண்டாவெறுப்பான புன்னகையை போலி என்கிறார்கள், நேர்மையாக இவ்வுலகில் எந்த காரியத்தையும் செய்யவியலாது என உணர்ந்தவர்கள்.
 
அடித்தட்டு மக்களாக நகரின் ஒதுக்குப்புறத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வு சேமிப்பு இல்லாதது, அவர்களுக்கு புவிசார்ந்த கோட்பாடுகள் இல்லை, உலகத்தின் இயக்குவிசை பற்றிய சிந்தனைகள் இல்லை, நீங்கள் ஓய்வு நேரங்களில் பரிதாபப்பட்டு பிறரிடம் விவாதிப்பதற்கான எல்லா தகுதிகளையும் பெற்றுள்ளனர்.

மனைவியை தொழிலுக்கு அனுப்பும் கணவன், மந்திரத்தால் குணமடையாது இறந்த குழந்தை என பெருங்கொடூரமான சம்பவங்களை தன் நாளில் ஒரு சம்பவமாக கடக்கின்றனர். இங்கே வலுத்தது தான் வாழும். வலுத்ததாக வாழ இயலாது என தெரிந்து வாழ்க்கையை வாழ்ந்தால் போதும் என வாழ்பவர்களின் ஒரு நாளத்திய  போராட்டமே "நாளை மற்றுமொரு நாளே"

இவரின் எழுத்தில் 80களின் மெட்ராஸ் மிளிர்கிறது. ஷெனாய் நகரின் எழில், அதன் மரமடர்ந்த சாலைகள், குதிரை வண்டி என அப்போதைய மெட்ராஸ் சென்னையாக தளிரத் தொடங்கிய நேரமது. தற்போது பூசப்பட்டுள்ள அரிதாரத்தை அழகாக அழித்துக்காட்டுகிறார்.

முன்னுரையில் ஜே.பி.சாணக்யாவின் புனைவையே ஒரு சிறுகதையாய் எழுதலாம் போலிருக்கிறது.
 
#NaalaiMatrumoruNaale #நாளைமற்றுமொருநாளே

Thursday, June 15, 2017

மனித கழிவுகள்

Ever wonder who cleans your shit! yes another human like you.

மனித கழிவுகளை மனிதன் அகற்றவேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டு விட்டோம் என அரசாங்கமோ, வெகுஜெனமோ சொல்கிறார்கள். உண்மையில் நீங்கள் தான் காரணம். ஆம் நீங்கள்.

சாதாரன மிட்டாய் காகிதத்தை தெருவில் வீசுவதில் தொடங்குகிறது இந்த குப்பை கலாச்சாரம். சுத்தமான ஒரு இடத்தை குப்பைக்குவியலாக்குவது எளிது, அது அனைவராலும் இயலும். உங்களை மாதிரியாகக் கொண்டு பலரும் அதே இடத்தில குப்பைகளை கொட்டியப்பின், அதே குப்பைக்குவியலில் நீங்கள் வீசிய காகிதத்தை மட்டும் பொறுக்க சொன்னால் கூட அவ்வளவு குப்பையும் புரட்டி நீங்கள் வீசியதை எடுப்பீர்களா? இல்லை அந்த குப்பை குவியலைத்தான் கையால் தொடுவீர்களா? வெள்ளை கைக்குட்டை கொண்டு மூக்கை மூடி கடந்து செல்வீர்கள்.

பின் உங்களின் மலம், உங்கள் மருத்துவ கழிவுகள் மற்றும் உங்கள் குடும்பத்தின் கழிவுகளை சுமக்க அவர்களுக்கு என்ன விதி? இல்லை அவர்கள் அதற்கென்றே பிறந்தார்களா? அது அவர்களது பணி, அதற்காகத்தான் அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என சொல்லாதீர்கள்.
இவ்வேலைக்கு பணி உருவாக்கியதே அரசின் பெரும் தவறு.

ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது முற்றிலும் தொகுக்கப்பட்ட கழிவுகளை வேறு இடம் சேர்ப்பதற்கு வேண்டுமானால் பணியாளர்களை அமர்த்தலாம், அமர்த்தவேண்டும். பிற நாடுகளில் அது தான் வழக்கம்.

உங்கள் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவை எதனை பேர் பிரித்து தொகுத்து அனுப்புகிறீர்கள்? எவரும் இல்லை. மலக்குழியில் விசவாயு தாக்கி உயிரிழந்தார் என்பது உங்களுக்கு செய்தி, அவர்கள் குடும்பத்திற்கு அது இழப்பு. இறந்தவர் ஒரு தந்தையாக இருக்கலாம், அவரை நம்பி 4-5 பேர் இருக்கலாம், அவர் கொண்டுவரும் தினக்கூலிதான் அவர்கள் உலைவைக்கும் காசாக இருக்கலாம்.

Human Scavenging மனித கழிவுகள்


இதில் ஜாதி வேற்றுமைகளை களைந்தெறியுங்கள், மனிதம் கொண்டு சிந்தித்தால் மெல்ல மெல்ல இது பற்றிய புரிதல் வரும். முலையூட்டும் போதே இதை அடுத்த தலைமுறைக்கு கற்பியுங்கள், இனியாவது இந்த அவலம் நடவாமல் இருக்கட்டும். ஓங்கட்டும் மனிதம்.
வாழ்த்துக்கள் திவ்யா. நல்ல முன்னெடுப்பு.

Kakkoos Documentary Film Official Release | Direction - Divya


#HumanScavenging #மனிதகழிவுகள் 

Wednesday, May 31, 2017

வாழும் பிண உதாரணங்கள்

மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தடை. நான் என்ன சாப்பிடவேண்டும் என்பதை இங்கே யார் தீர்மாணிப்பது? அப்போது இது ஜனநாயக நாடில்லையா? சர்வாதிகார நாடா? இறைச்சி என வந்துவிட்டால் ஆடென்ன மாடென்ன அனைத்தும் உயிர் தானே. எனில் பொதுவாக இறைச்சிக்கு தடை என்றல்லவா விதி வந்திருக்க வேண்டும், அவர்களுக்கு மாடு பிடிப்பதால் மாட்டிறைச்சிக்கு தடையாம். முதலில் நீங்கள் அணிந்துள்ள மாட்டுத்தோலால் செய்யப்பட்ட அரைக்கச்சு, செருப்பு போன்றவற்றை அணிவதை நிறுத்துங்கள், அல்லது அதற்கு தடை விதியுங்கள்.
சற்றே இறங்கி ஆராய்ந்தால் தடைக்கான காரணம் விளங்கும். தென்னிந்தியாவில் சங்கி மங்கிகளால் எப்பாடுபட்டும் வேரூன்ற முடியவில்லை, ஆதலால் அவர்கள் கையில் உள்ள அதிகார பாய்ச்சல் எதுவரை செல்கிறது என காணுவதற்கான முன்னோட்டம் இது.
தென்னிந்தியாவில் தான் அதிக இறைச்சி புழக்கம் உள்ளது.
இதில் எதிர்பாராத விதமாக நடந்தது 5 மாநிலங்களின் ஒற்றுமை குமுறல்கள்.
இந்த விவகாரத்தில் முதுகெலும்பு இல்லாமல் எப்போதும் போல அடிமையாய் நின்றது தமிழக அரசு மட்டுமே. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கடிதம்
https://www.facebook.com/PinarayiVijayan/posts/1383532648405228
பதவியாசை பிடித்த எந்த அரசியல்வாதியும் மக்களுக்கு சேவை செய்ய மாட்டார்கள், நாம் தேர்ந்தெடுக்காத இந்த EPS, OPSம் ஓர் வாழும் பிண உதாரணங்கள்.

Wednesday, May 24, 2017

தற்கொலை எண்ணம்!

வாழ்வதற்கான பிடிப்பை தேடி முடிவற்ற
சாலைகளில் அலைகிறான்.
சில நாட்களாகவே தாயாட்டத்தில் தாயம்
விழும் பிரச்சனையால் அவதிபட்டு வந்தான்,
ஆடுபுலி ஆட்டத்தில் கூட அவனை எளிதில்
வெட்டிவிடுகின்றனர்.
உறுப்படாதவன் என தன்னை அழைப்பதில்
ஒரு பொருள் உள்ளதாய் எண்ணினான்.
தன் எருமை வாரம் 2000 ஈட்டுவதாக
பால்காரர் சொன்னதில் அவனுக்கு
தற்கொலை எண்ணம் மேலோங்கியிருக்கலாம்.
தண்டவாளத்தின் கோடுகளில் மனதை
செலுத்தி 1000 முறை இறந்து பார்த்தான்.
தூக்குக்கயிற்றின் அடியில் முக்காலி
கிடந்ததாய் கண்டவர்கள் சொன்னார்கள்.

Monday, April 24, 2017

இன்றிரவு என்னால் நிம்மதியாய் உறங்க இயலும்.

என் உடையவளே என் காதலே
உன் முடிவற்ற கண்களின் பீடிப்பில்
இருந்து என்னை விடுவித்துக்கொண்டேன்
இலையுதிர்காலத்தின் ஏகாந்தத்தை கொண்ட
உன் இருப்பின் சுகத்திலிருந்து விடுபட்டேன்
மழைநாளில் சாளரத்தின் வழி கண்ட அந்த
இன்னொரு உலகத்தில்தான் தற்போது என்
இருப்பு இருக்கக்கூடும்.
விரைவில் இவ்விடம் நிரந்தரம் கொள்ளலாம்
இவ்விடம் தூதுமடலுக்கான சாத்தியங்களற்று
விளங்குகிறது.
காற்றில் அலைய விட்டிருக்கும் இத்தகவல்
உன்னை அடையும் என்ற நம்பிக்கையில்
இன்றிரவு என்னால் நிம்மதியாய் உறங்க இயலும்.

என்னை அடையும் வழி உனக்குத் தெரியும்
வந்து சேர்.

இந்த சுவர்கள்

உங்கள் ரகசியங்கள் யாவும் காற்றில்
கசியாமல் மானம் காத்து நிற்கிறது.
இருபக்கம் வாசற்கொண்டு பூனையை சுத்தலில்
விடுகிறது.
வெயிலில் மிளிர்ந்து நிழல் தருகிறது.
மழைஊறி பாசிபடிந்த சுவர்களை கண்டதுண்டா?
சொர்க வாசட்சுவர் அது.
உங்கள் இருப்பின் போது தாங்கிய
சுவர் இறப்பின்பின் புகைப்படத்தை தாங்குகிறது.
ஆணி ஊன்றிய உங்கள் சுத்தியல் அடிகளுக்கு
உணர்வுகள் இல்லா அச்சுவர் கத்தத்தான்
செய்கிறது.

Monday, March 20, 2017

தண்ணீர்

ஒரு துளி தண்ணீர் ஒரு யுகத்தின் தேவை. குடித்து, குளித்து, பாசனம் செய்து, அணைகளில் சேமித்து, உபரியாக கேப்பாரற்று கடலில் கலக்கும் வரை காவிரியும் நமக்குமான உறவு அலாதியானது.

தொழில்துறைகள் வளராத வரை காவிரியும் வீறுகொண்டு பாய்ந்தது, மனிதனின் தண்ணீர் தேவையும் கட்டுக்குள்ளாக இருந்தது. விவசாயம் விடுத்து தொழில்நுட்பத்தை கையில் ஏந்திய உடன் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.

தற்போது தேவை மட்டும் உள்ளது நீர் ஆதாரம் இல்லை. மக்கள் தொகை பெருகிவிட்டது ஆதலால் தண்ணீர் தேவை அதிகமானது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றே. ஆனால் எந்த ஆறிலும், நதியிலும், சுனையிலும், ஓடையிலும் தண்ணீரே இல்லையே. பாத்திரத்தை ஓட்டை செய்துவிட்டு தண்ணீர் நிற்கவில்லை என்பதில் எவ்வித நியாயமும் இருப்பதாக தெரியவில்லை.

கர்நாடகாவில் பிறந்த நதி என்பதால் அவர்கள் அணை கட்டுகிறார்கள் அதனால் தண்ணீர் வரவில்லை என சொல்பவர்களை OfficeRoomக்கு கூட்டிச்சென்று வெளுக்கவேண்டும், 1920க்கு பிறகு ஏதேனும் அணை கட்டியுள்ளதா தமிழகம்? எத்தனை ஏரிகளை தூர்வாறியுள்ளது? அதுசரி நாங்களே விவசாய நிலங்களை விற்போம் பிறகெப்படி நாங்களே அதை காக்கவியலும்.

சரி நம் மீதுள்ள ஆதங்கத்திற்கு தனியே ஒரு பதிவிட வேண்டும், இப்போது கர்நாடக மக்களை கழுவி ஊத்த வந்துள்ளேன்.



கிட்டத்தட்ட கோடி மக்கள் வாழும் பெங்களூரில் 50% காவிரி நீர் வீணாக்கப்படுகிறது. கொல்கத்தாவிற்கு பிறகு தண்ணீரை வீணாக்குவது இவர்கள்தான்.

50% என்பது மிகப்பெரிய அளவு தண்ணீர், பாதி தமிழ்நாட்டுக்கான தேவை, ஒரு கேரளாவுக்கான தேவை. நான் தினமும் நடந்து செல்லும் பாதையில் தரை கழுவுவதற்காக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் நம் ஊர்களில் தரை கூட்டுவது தான் வழக்கம். மாறாக இங்கே கழுவப்படுகிறது. இது ஒரு வகையான வீணாக்குதல், இது போலவே பல வழிகளில் தண்ணீரின் தேவை அறியாமல் வீணாக்குகிறார்கள்.



தான்போக்கில் சென்றிடமெல்லாம் தண்ணீர் பருகிய காலம் மாறி, அரசே 10ரூபாய்க்கு தண்ணீர் விற்கிறது. காலத்தின் கொடுமைகளில் இதுவும் ஒன்று. நாளை மூன்றாம் உலகப்போரின் மூலதனம் தண்ணீர் தான் என கணிக்கப்படுகிறது.

தண்ணீர் வீணாக்குதல் எளிது, உருவாக்குதல் கடினம்.

Monday, March 13, 2017

இரோம் சானு சர்மிளா

2000மாவது ஆண்டில் மல்லோம் என்னும் ஊரில் ஒரு கவிதாயினி பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறாள் திடீரென ராணுவம் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்துகிறது, அதில் 10 பொதுமக்கள் இறந்துபோகின்றனர். பொதுவாகவே எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் சமூக அக்கறை சற்று அதிகம், AFA(Armed Forces (Special Powers) Act, 1958) மூலம் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் அதன் பின் நடந்த கொடூரங்களை தாளாது, அவ்வூர் மக்களுக்காக தொடங்கிய உண்ணாநிலை, தலைவாரா மற்றும் தன முகத்தை காண விரதம் 16 வருடங்கள் நீடித்தது. இன்று போராடிய அதே மக்களிடம் தோல்வியை சந்தித்து நிற்கிறார்.


இரோம் சானு சர்மிளா - "வாக்களித்த 90 நபர்களுக்கு நன்றி" என சுருக்கமாக தன் கருத்தினை வெளிப்படுத்திவிட்டார். 16 வருடம் யாருக்காக உண்ணாவிரதம் இருந்தோமோ அவர்களே வாக்களிக்கவில்லை என்ற மனக்குமுறல் அளப்பரியது.


பொதுவாகவே நம் நாட்டில் வடக்கு, தெற்கு என பாராமல் நல்லவர்களின் நிலைமை இதுதான். எதுவுமே செய்யாமல் கொழுத்த காசு கண்டு ஓட்டுக்களை விற்று எளிதாக முதலமைச்சர் ஆகிவிடலாம். ஆனால் மக்களுக்காக போராடி, சிறை சென்று, பல இன்னல்களை கடந்து வந்து தேர்தல் களத்தில் நின்றால் விடை இதுதான்.



வரலாறு உங்களை மறக்காது மணிப்பூர் மக்களே.
நல்லவர்களாக இருந்தால் எதையும் மாற்றவியலாது, இனியாவது திருந்துங்கள் நல்லவர்களே. இது மோடி ஆளும் பூமி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நான் சொல்லத் தேவையில்லை.
இதற்குத்தான் ஒரு மகான் அன்றே சொன்னார் "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்" என்று.

Wednesday, March 1, 2017

அப்பா

 
தன் அப்பாவின் கல்லறைக்குழியில் இட்ட
விதை ஒன்று தளிர்விட்டது, மரமாகி
பழம் விட்டது, பறவைகள் உண்ட
பழத்தின் எச்சம் மீண்டும் மரமானது
தற்போது காணும் இடங்களிலெல்லாம்
தன் அப்பா.

என் எழுதப்படாத ஓர் புனைவிலிருந்து.

Friday, February 24, 2017

பாலைவனமாகும் காவிரி படுகை

செயற்கை எரிவாயு தயாரித்தல் என்னும் பெயரில் காவிரி படுகையில் உள்ள விவசாய நிலங்களில் சில ஆயிரம் அடியில் மீத்தேன் வாயு(மணமற்ற வாயு) எடுக்க பலவருடங்களாக மத்திய அரசு முயற்சித்து வருகிறது. பல போராட்டங்களுக்கு இடையிலும் நெடுவாசலில் சில ஆழ்துளை கிணறுகள் நிறுவப்பட்டு எரிவாயு எடுக்க காத்திருப்பு நிலையில் உள்ளது.

இதை செய்யும்முன் அங்கு வசிக்கும் மக்களிடம் கருத்துக்கள் கேட்டார்களா? அவர்களுடன் கலந்து ஆலோசித்தார்களா? இல்லை. முற்றிலும் மறைக்கப்பட்டு இது அரங்கேறியுள்ளது. மாநில அரசுக்கு மீத்தேன் கசிவின் ஆபத்துக்கள் தெரியாதா என்ன? தெரிந்தும் அனுமதிக்க காரணம், எங்கோ ஏதோ நடந்தால் எனக்கென்ன என் சட்டைப்பை நிரம்பிவிட்டது என்ற ஒரே போக்கு மட்டும்தான். இதை பற்றி மாணவர்களுக்கும், ஏனைய மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை. விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் முயற்சி இது.



கூடங்குளம் அணுமின் நிலையம் வான்பார்த்து நிற்கிறது. சில காலங்களுக்கு முன் எவ்வளவு போராடியும் மக்களால் தடுக்க இயலாமல் போனது. கட்டிமுடித்த பிறகே மக்கள் போராட்டம் நடத்தினர், எனின் அங்கு என்ன வரப்போகிறது என்றே அவர்களிடமிருந்து மறைக்க பட்டிருக்க வேண்டும். அணுவுலையின் ஆபத்து பற்றி மேலோட்டமாய் சொல்லவேண்டும் என்றால் ஒரு 500வருடங்களுக்கு அதன் பாதிப்பு தொடரும். 1986ல் ருசியாவின் ப்ரிப்யாட் மாகாணத்தில் நடந்த அணுவுலை விபத்தில்(Chernobyl disaster) 4000பேர் கேன்சரால் இறந்துள்ளனர், போலவே சப்பை மூக்கு ஜப்பானில் 2011ம் ஆண்டில் நடந்த விபத்தில் 1,30,000 மக்கள் இடம்பெயர்க்கப்பட்டனர். இன்று வரை இரண்டு இடங்களிலும் கதிர் வீச்சுக்கான அபாய எச்சரிக்கை உள்ளது. அணுவின் ஆபத்தை கண்டுபிடித்துவிட்டு "I made one great mistake in my life" என்று தானே நொந்த ஐன்ஸ்டீன், வரலாற்று வியப்பின் உச்சம்.

மீத்தேன் இயற்கை எரிவாயு தானே, சொல்லப்போனால் அது வளிமண்டலத்துக்கு உகந்தது வேறு. ஆம் ஆனால் அது கரிம வாயுவுடன் கலக்கும் போதுதான் மேல்சொன்னது சாத்தியம்.

மாறாக கடந்த 20ஆண்டுகளில் கரிம வாயுவை விட மீத்தேன் 380 மடங்கு அதிகரித்துள்ளது. தை, மாசி மாதமே சுட்டெரிக்கும் வெப்பம் வர காரணம் இதுவே. ஆர்டிக் பிரதேசத்தில் "Artic Death Spiral/Methane Time Bomb" என்று அழைக்கப்படும் இவ்வெரிவாயு பல ஆயிரம் பனிப்பாறைகளை உருக்கி விட்டது. உலகின் தட்பவெட்ப மாறுதலில் முக்கிய பங்குவகிக்கும் ஆர்டிக் பிரதேசத்தை காக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுக்கொண்டே உள்ளது.



எனவே உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லா இடமாக மாற்றவல்ல இந்த திட்டத்தை ஏன் விவசாய ஜீவநாடியான காவிரி படுகையில் செய்ய வேண்டும்? அதுவும் விவசாயமே வாழ்க்கையாக கொண்டு வாழும் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இந்த திட்டதை அமல்படுத்தியுள்ளனர். நிலங்களை விற்றுவிட்டு ஓடுங்கள் பிழைக்க மாதாமாதம் பணம் தருகிறேன் என்பது போல உள்ளது அரசின் திட்டங்கள். சில மாதங்களுக்கு முன்பு விவசாயத்தை கைவிடுங்கள் என்று மோடி மஸ்தான் சொன்னது நினைவிருக்கலாம்.





இந்த திட்டத்திற்கு தி.மு.க 2010ல் அனுமதி வழங்கியது. திராவிட கட்சிகள் என்றாலே ஊழலும் கொள்ளையும் தான். மக்களை காக்கவோ, அவர்களின் உரிமையை வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவோ இக்கட்சிகள் என்றுமே முன்வந்ததில்லை. ஆதலால் நாமே போராடி நம் வாழ்வாதாரத்தை காப்போம். வளர்க விவசாயம், வாழ்க விவசாயி.

Tuesday, February 21, 2017

ஆதியோகி - ஒரு வனத்திருடன்

ஒரு அடர்ந்த காடு, பல கோடி உயிரினங்களுக்கு வாழ்வாதாரம். பல விலங்குகளுக்கு பசியாற்றும் சுனை சுரக்கும் வனம், போலவே மழையின் கீழ் உள்ள மக்களுக்கு குடிநீர் ஈயும் அட்சயப் பாத்திரம்.

ஒரு மனிதன் நாட்டை வெறுத்து காட்டிற்கு குடிபுகுகிறான், சில நாட்களுக்கு மரத்தடியில் தஞ்சம் கொள்கிறான். பிறகு கடும் குளிர், மழையிலிருந்து தன்னை காத்துக்கொள்ள சில மரங்களை வெட்டி ஒரு வீடு கட்டுகிறான். அப்போது அதை வாழ்வாதாரமாகக் கொண்ட சில பறவைகள், இன்னபிற உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இடம்பெயர்கிறது. அங்குள்ள பழங்கள், கீரைகள், காய்கறிகளை பறித்து பசியாறுகிறான்.

பின் தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை திருமணம் செய்து பிள்ளைகளை பெறுகிறான். பிள்ளைகள் வளர, ஓடியாடி விளையாட இன்னும் சிறிது இடம் தேவைப்படுகிறது. மேலும் சில மரங்களை வெட்டி தன் வீட்டை பெரிதுபடுத்துகிறான். தற்போது ஒரு 10குடும்பம் வாழுமளவு இடம் விஸ்தாரமாய் உள்ளது.

தன் குடும்பத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பணமீட்ட முடிவெடுக்கிறான். தனக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுள்ளதை பயன்படுத்தி, ஒரு லிங்கம் உருவாக்கி கோவில் காட்டுகிறான். இதன் மூலம் இன்னும் சில நூறு மரங்கள் வெட்டப்படுகின்றன. பல ஆயிரம் விலங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. ஒன்று இரண்டாய் வந்த மக்களின் கவனத்தை ஈர்க்க யோகா, ஆனந்த குளியல் என்னும் கொறலி வித்தைகளை காட்டுகிறான். மக்கள் மெல்ல குவிகின்றனர்.

அவர்கள் வந்துசெல்ல பாதை, இடம் ஆகியவை குறுகலாக உள்ளதை உணர்ந்து மேலும் சில மரங்களை வெட்டி பாதை அமைகிறான், பெரிய கூடாரங்கள் அமைகிறான். 5% வனம் அழிகிறது. மக்களின் தண்ணீர் தேவையை உணர்ந்து அங்குள்ள நீரூன்றின் பாதையை மாற்றி ஒரு குளம் உருவாக்கி அதில் கடக்குமாறு வழி செய்கிறான்.

தனக்கு அல்லக்கைகள் சிலரை தத்தெடுத்து, அவர்களை தன்னை சத்குரு, ஆதியோகி என்று பல புனைப்பெயர்களில் அழைக்கச்சொல்கிறான், அவர்கள் தங்க அங்கேயே ஒரு குடியிருப்பை கட்டிக்கொடுக்கிறான். 25% வனம் அழிந்துவிட்டது.


Digital முறைகளில் ஏமாற்ற CD, MP3, DVD போன்று பல வகைகளை கையாள்கிறான். இவ்வளவும் செய்ய தனி ஆளாய் இயலாது அரசின் உதவி தேவை, அரசுக்கு பணம் தேவை. அரசு என்றால் அங்குள்ள மக்கள் பிரதிநி அல்ல பிரதமர். அரசுக்கும் இவனுக்கும் உள்ள தொடர்பு இன்று பத்ம விபூஷன் வரை வளர்ந்திருக்கிறது. எனவே பிரதமர் வரை செல்வாக்கு உள்ளதென்றால் வெறும் ஆன்மீகம் மட்டுமா நடக்கும்? சில நாட்களுக்கு முன்பு பெண்களை மயக்கி மொட்டையடித்த சம்பவம் நினைவிருக்கலாம்.

இது வெள்ளியங்கிரி மலையில் 55ஆயிரம் சதுரமீட்டராக உயர்ந்து நிற்கும் உங்கள் ஈஷா யோகா - ஜக்கி வாசுதேவின் கதை. மைசூரில் பிறந்து வளந்தவர், மைசூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இல்லாத இடமா? புயல், ஜல்லிக்கட்டு, விவசாயி மரணத்திற்கெல்லாம் வராத பிரதமர் மகாசிவராத்திரிக்கு இந்த கொள்ளையனை காண வருகிறார்.

Sunday, February 19, 2017

பதஞ்சலி

பதஞ்சலி - இன்று Fast-moving consumer goods என்று உங்கள் சமையலறை தொடங்கி கழிவறை வரை வந்துவிட்டான் பாபா ராம்தேவ் எனும் ராம் கிருஷ்ணா யாதவ்.

முற்றிலும் இயற்கை தயாரிப்பு என்றால் அதிகபட்சம் ஒரு இரண்டு நாளுக்கு தாங்கும். முட்டை கலந்த மருதாணி என்றால் ஒருநாள் கழித்து கெட்டுவிடும், பிறகு எப்படி கெடாமல் 6 மாதத்துக்கு வைத்து விற்கின்றனர்? அவ்வளவும் ரசாயனம். நீங்கள் அன்றாடம் உபயோகிக்கும் அனைத்து shampooகளிலும் தான் இவ்வளவும் இருக்கிறதே என்றால் அவன் யோகா, இயற்கை என்றெல்லாம் உங்களை ஏமாற்றி வரவில்லை, இவன்தான் யோகா என்னும் பெயரில் வேரூன்றியுள்ளான்.


யோகா என்னும் கலை ஒரு கல்வி போலத்தான். நம்மிடையே புழங்கி இன்று பயன்பாட்டிலிருந்து வெகு தூரமுள்ளது யோகா.

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே
என தற்சிறப்புப் பாயிரதில் குறிப்பிட்டுள்ளனர். யோகா நிலையில் உள்ள பதஞ்சலி ஆண்டவரை பற்றி புகழ்ந்து பாடும் பாடலிது.


இயற்கை முறையில் விற்பனை செய்பவனால் எப்படி ஒரே வருடத்தில் 5000கோடி ரூபாய் லாபம் காண இயலும்? அதைவிட இயற்கையான அரசின் காதி பொருட்கள் ஏன் இவ்வளவு விற்கப்படவில்லை? கொள்ளையடிக்க பல வழிகள் உள்ளன அதில் இவன் கையாண்டது யோகா மற்றும் ஆன்மிகம். Future Group என்னும் Conglomerate வணிக முறை கொள்ளைக்கூட்டத்துடன் இணைந்து செயல்பட்டதின் பயணிது.

சில வருடங்களுக்கு முன்பு தான் நடத்திவந்த Divya Yoga Mandir Trustல் முறைகேடு நடப்பதாக போராடிய 155 நபர்களும் அந்நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டனர். பிறகு தான் நடத்திவந்த Divya Pharmacyல் உள்ள சில பொருட்களில் மனித எலும்பு மற்றும் மிருக உறுப்புக்கள் பயன்படுத்துவதை நிரூபித்த Brinda Karatஐ BJP மூலம் மிரட்டியது பல பேருக்கு தெரியாதது.
கண்மூடித்தனமாக எவரையும் நம்பாமல் சற்றே பகுத்தறிந்து பாருங்கள். எவன் திருடன் என்று நன்றாகத் தெரியும்.

Wednesday, February 15, 2017

பட்டி to ஹள்ளி

"செகத்தினிற்செல்லுந் தேசாந்திரிக் கவன் கற்ற வித்தை" என நீதிசாரம் கூறுகிறது. பயணப்படுதல் என்பது வித்தை. அனைவரும் பயணம் செய்கிறோம், இப்பயணங்களில் யாவும் ஒரு தேவை, ஒரு நோக்கம், ஒரு ஆதாயம் உள்ளது. ஆனால் இவை எதுவுமே இல்லாமல் உலகை அறிய பயணப்படுத்தல் ஒரு வரம். அப்படி பயணம் செய்தவர்களின் பெயர்கள் வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கப்பட்டுள்ளன, அப்படி பயணப்பட்டவர்களின் பெயர்களை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கிரேக்கர்கள், ரோமானியர்கள் என Leif Eriksson தொடங்கி Megasthenes, Colombus, Gama வரை இவ்வுலகறியும்.

"கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்கமுடியும்" என தேசாந்திரியில் #எஸ்ரா குறிப்பிடுகிறார்.

பல ஊர்களை சுற்றித் திரிந்து அங்கே வாழும் மக்களின் வாழ்வாதாரம், வாழ்வியல் முறை, கலாச்சாரம், இவைகளை கற்றல் என்பது அனைவராலும் செய்ய இயலாத ஓர் காரியம். Embrace of the Serpent என்னும் படத்தில் இரு காலகட்டத்தில் வாழும் நபரின் வாழ்வைப் பற்றியும், Baraka என்னும் ஆவணப்படத்தில் காண்பிக்கும் ஊர்களும் மக்களின் வாழ்க்கை முறையும் நாம் நினைத்துக்கூட பார்க்க இயலாது.

பயணத்தில் மிக முக்கியம் வரலாறு அறிதல். நம்மில் பெரும்பான்மையோருக்கு தங்களின் ஊரின் பெயர்க்காரணமே தெரியாது. இவ்வளவையும் ஏன் மல்லுக்கட்டி (மல்லு"க்"கட்டி இடையில் உள்ள க் எடுத்துவிட்டால் மல்லு கட்ட - ஒரு கேரள பெண்ணை திருமணம் செய்ய. தமிழ் எவ்வளவு இனிமையான மொழி ஒரு சந்திக்கு பல அர்த்தங்கள்) குறிப்பிடுகிறேன் என்றால் ஊர் பெயரில் உள்ள பட்டியை நீக்கிவிட்டு, அள்ளி/ஹள்ளி என மாற்றிவருகின்றனர் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் மாவட்டதில் உள்ளவர்கள்.

வரலாற்றை தலைகீழாக புரட்டிப்போடும் செயலிது. பட்டி - நாம் ஆடு அடைக்கும் இடம் இதன் மூலச்சொல்லே நம் ஊர்ன் பெயர்களில் உள்ள பட்டிகளுக்கு காரணம். இதை யார் சொல்லி மாற்றுகிறார்கள்?

இது கன்னடத் திணிப்பா? இல்லை அரசே செய்கிறதா? இதன் பின்புலம் என்னவென்று ஆராய்ந்து வேறொரு பதிப்பில் சொல்கிறேன்.

Tuesday, February 7, 2017

இந்தி திணிப்பு

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?



வீறுகொண்டு எழ வைத்த பாரதியின் வரிகள், சுதந்திர வேட்கை தனியும்போதெல்லாம் ஒருமுறை வாசித்தால் போதும், ரட்சகனின் நாக்கு பூச்சி போல நரம்புகள் புடைத்துவிடும்.

ஆதி தொட்டே தென்னிந்தியர்கள் மீதும், நம் கலாச்சாரம் மீதும், நம் ஒற்றுமையின் மீதும் இந்த காவி பக்தாக்களுக்கும், வடஇந்திய மாலுமிகளுக்கும் ஒரு கட்டற்ற வெறுப்பு உள்ளது.
அவர்களின் திணிப்பை மார்புடைத்து எதிர்த்த ஒரே கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம் மட்டுமே.

1937 முதலே Anti-Hindi imposition agitation தொடங்கி எதிர்த்து வந்தவர்கள் நாம். இன்று கர்நாடகாவிலும், ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும், கேரளாவிலும் வேரூன்றி பல்லிளிக்கிறது ஹிந்தி.

100 ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் அவர்களால் தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே நேரிடை மோதல் தோல்வியை தந்த பட்சத்தில் இப்போது அதிகார வழி உட்புகுகிறார்கள். இந்தி வழி கல்வி என ப்ரார்த்திமிக், பரிட்சையா, மத்தியமா, ராஷ்டிரபாஷா என வேடிக்கையான தேர்வுகளை நடத்தியும், நம் மாணவர்கள் கேள்வியையே பதிலாக எழுதிவிட்டு வருகின்ற கில்லாடிகள்😂
இப்போது மைல்கற்களிலும், பதாகைகளிலும் தமிழை பிடுங்கிவிட்டு, இந்தியில் எழுதுகிறார்கள்.

நம் மக்கள் பதிலுக்கு செய்தது இணைப்பில்

எண்ணெய் கசிவு

கறிக்காக, முத்துக்காக, பொக்கிஷத்துக்காக இன்னபிற செல்வங்களுக்காக கடல் தாயின் அங்கங்களை சிதைத்துவருகின்றனர். இப்போது எண்ணெய் கசிவு.
இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டன, இதிலென்ன இருக்கிறது எதிர்பாராத விபத்துதானே? நிலத்தில் இரண்டு lorryகள் மோதிக்கொள்வதில்லையா? ஏளனமாக கேட்கலாம்.
நிலத்தை ஆதாரமாக கொண்டு வாழும் உயிரிகளுக்கு பகுத்தறியும் திறன் உள்ளது, எதை குடிக்கவேண்டும் என்று நன்கு அறிந்திருக்கிறது, அனால் கடல்வாழ் உயிரிகளுக்கு வாழ்வாதாரமே நீர்தான் அந்நீரில் தான் உங்கள் கழிவுகளை கலக்கிறீர்கள்.
அன்று ஏற்பட்ட விபத்தால் ஏறக்குறைய பல நூறு வகையான கடல் வாழ் உயிரிகள் அழிந்துவிட்டன. மீன்கள், ஆமைகளே இதில் பெருவாரியாக பாதிக்கப்பட்ட உயிரிகள்.
"பெருமழை வரப்போகிறது
இந்த பூமி நனையப் போகிறது
நான் கரையப் போகிறேன்"
என்னும் கவிதை வரிகள் இயற்கையின் அழிவை பற்றி பேசுகிறது.
மனிதன் அழிக்கா விட்ட பொருட்கள் மிக சொற்பம், அதில் அவனும் அடக்கம்.

குளிர் பானங்கள்

#BanPepsi #BanCoke மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் #Bovonto வை ஏன் ஆதரிக்கணும்?
அவனும் அதே தாமிரபரணியிலிருந்து தான் தண்ணீர் உறிஞ்சப்போகிறான். செத்தாலும் உள்ளூர் விஷம் குடித்து சாக வேண்டும் என்ற பட்றா? இதை வழிமொழிபவர்கள் பாதிக்கு மேல் வெளிநாட்டு சரக்கை தேடித்தேடி குடிப்பவர்கள் தான்.
அந்நியர்கள் விரட்டப்பட வேண்டுமென்றால் குண்டூசி தொடங்கி விரட்டப்பட வேண்டும். போலவே நம் மக்களும் உணவு தொடங்கி பல வர்த்தகங்களை நாடு கடந்து செய்கின்றனர். சரவணபவன், மதுரை இட்லி என நாமும் பல நாடுகளில் வேரூன்றி உள்ளோம். அவன் நம்மை விரட்டினால்?
கேடு விளைவிக்கும் அந்நிய பொருட்களை தடைசெய்தலே சாலத்தகும். நூடுல்ஸ், சர்க்கரை, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் இவைகளை ஒழுங்கு படுத்துங்கள்.
இயற்கையை நாடுங்கள் அதுவே சிறந்த உணவு.

ஏறுதழுவல்

வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா? உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!
பாரதிதாசனின் வரிகள் இவை. எக்காலத்திற்கும் பொருந்தும்.
இன்று காலை #WeDidJallikattu #JusticeForJallikattu போன்ற HashTag இட்டு கீச்சியவர்கள் யாவரது கீச்சும் வெளியிடப்படவில்லை. மாறாக Duplicate tweet error வந்தது.
எனவே உண்மை எவ்வித ஊடாக சென்றாலும் அதை தடுப்பது மத்திய அரசின் இக்கால மட்டுமல்ல, பலகால பணி.
இதில் என்ன ஒரு கூத்து என்றால் அழியும் தருவாயில் இருந்த ஜல்லிக்கட்டு, சேவல்சண்டை, மாட்டுவண்டி பந்தயம் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சென்றாயிற்று, இனி அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நன்றி PETA (People for the Ethical Treatment of Animals) Narendra Modi
எனவே அவர்களை ஒடுக்கும் ஒரே ஆயுதம் நம்முடைய ஒற்றுமை ஒன்றே. ஒன்றுபடு! எக்காலத்திற்கும்.


#Jallikattu ஒற்றுமையில் நிரூபித்தது மட்டும் போதாது. கலையில், அறிவியலில், இலக்கியத்தில், கலாச்சாரத்தில் என அனைத்திலும் மேலோங்க வேண்டும்.
தொன்றுதொட்டு நம் கலாச்சாரம் தலைசிறந்தது என நாம் மட்டுமே பேசி வருகிறோம், 5000, 4000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் அடையாளங்கள் தென்பட துவங்கியுள்ளன. எனினும் அது உலகம் முழுதும் சென்று சேரவில்லை, இலக்கியம் படைத்தவர்கள், தீர்க்கமுடியாத நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தவர்கள், கலை, அறிவியல் ஞானம் படைத்தவர்கள் யாரும் அதை தாம் மட்டும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கும் போதித்தார்கள்.
2300 ஆண்டுகளுக்கு முன்பே முனிவரொருவர் கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார், 1748 தான் Jacques Daviel என்பவர் first modern European physician to do a eye surgery என தம்பட்டம் அடித்து உலகமே திரும்பி பார்த்தது.
புத்தக, கலை அறிவியல் அறிவை வளர்ப்போம் மீட்டும் ஓர் ஆதித் தமிழினம் செய்வோம்.

பெண் சுதந்திரம்

70ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது நிச்சயம் ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்று. இரவு பத்துமணிக்கு மேல் தனியாக ஒரு பெண் நடந்து செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பது விளக்க இயலாது.
தெரு, சந்துகளில் தான் பெரும்பாலும் வன்புணர்ச்சிகள் இடம்பெறுகிறது. CCTV camera இருந்ததால் இது போன்ற சம்பவம் நடந்தது அனைவருக்கும் தெரிய வந்தது, இல்லையேல் எப்படி இந்த நிகழ்வு நடந்தது புலப்பட்டிருக்கும்? அப்படியெல் இது போன்று கண்காணிக்காமல் எத்தனை நிகழ்வு நடந்திருக்கும்?
கடவுள் போன்று அனைத்து இடங்களிலும் காவலர்கள் கண்காணிக்கவியலாது உண்மை தான், ஆனால் நவயுக கடவுளான CCTV cameraவை முடிந்த வரை இதுபோன்ற இடங்களில் பொருத்தலாம்.
இவை அனைத்தும் தற்காப்பு முறையே, ஆனால் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க என்ன வழி? சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் இளவரசர் Turki Bin Saud Al-Kabirக்கு நிகழ்ந்தது நினைவிருக்கலாம். தண்டனைகள் தான் குற்றங்களை குறைக்கும் என்பது என் கருத்து.



Digital நாடகம்

#Demonetization எவ்வளவு சிறப்பான திட்டம்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றவுடன் வேக வேகமாக வரிசையில் நின்று தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றியவர்கள் யார் தெரியுமா?
இந்நாட்டின் ஏழைகளான அம்பானி, ரத்தன் டாட்டா, அதானி, குமார் பிர்லா, பொன்னவாளா, மிட்டல், ஷிவ் நாடார், பலோன்ஜி, ஆசிம் பிரேம்ஜி, திலிப் ஷங்க்வி, அமிதாப், ரஜினி (ஏன் எதற்கெடுத்தாலும் ரஜினியை உள்ளே இழுக்கிறீர்கள், அவர் என்னதான் செய்தார்? என்று யாராவது என்னை கேளுங்களேன்) இன்னபிற பழம்பெரும் சில்லறைகள்.
மற்றபடி விவசாயம் செய்யும் அன்றாட கூலிகளுக்கு, புதிய நோட்டுகள் அவர்கள் வீடுதேடி கட்டுக்கட்டாக குளியலறைக்கே வந்துவிட்டது.

2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குக்கே அதிகம் வரவில்லை, ஆனால் அதற்குள் Big Bazaar தன்னிடம் 2000 ரூபாய் உள்ளதென்றும் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும், SnapDeal வாடிக்கையாளர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை order செய்து கொள்ளலாம் அதற்கு 1 ரூபாய் service charge எடுத்துக்கொள்வோம் எனவும் அறிவிக்கின்றனர்.

வங்கிகள் செய்யவேண்டிய வேலையை செய்ய இவர்கள் யார்? இவர்களுக்கு எப்படி 2000 ரூபாய் நோட்டுகள் வந்தது? யார் கொடுத்தது இவர்களுக்கு?
இந்தியாவில் பிழைக்க corporateட்டாக இருக்க வேண்டும். விவசாயியாகவோ தினக்கூலியாகவோ இருந்தால் விடை உங்களுக்கே தெரியும்.. வாழ்க ஜனநாயகம்.

Thursday, January 5, 2017

கீச்சுலகம்

குழந்தை:
சிலேட்டின் மூலையில் அருவி வரைய தொடங்கிய குழந்தை, நான்கு கோணத்துக்குள் முடிக்கவியலாமல் இருக்கை வரை நீட்டித்தது. சரி தானே

வழிப்போக்கன்:
அழைபேசியில் ஒருவர் கோபத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது, ஆனால் ஆட்காட்டி விரல் நீட்டி யாரை எச்சரிக்கிறார்?

கடவுள்:
கடவுளை அன்றாடம் கடக்கும் ஒரு வழிப்போக்கனாக கடந்துவிடுங்கள், இல்லையேல் உறவாடி பூஜையறை வரை வந்துவிடுவான்.

காதல்:
இந்த இடம் நினைவிருக்கிறதா? என்றாள் *//அவ்விடத்தின் நினைவுகளை விட்டு நீங்கினால்தானே மறக்கவியலும்?//*
இல்லை என்றேன்.

வாழ்க்கை:

விமர்சனங்களுக்கு பயந்தவர்களின் பெயர்கள் எவ்வரலாற்றிலுமே இடம்பெறவில்லை.

பயணம்:
தன்னியல்பை தொலைப்பவர்க்கே பயணப்படுதல் வரமாகும், ஏனையோர்க்கு பிழைப்பிற்கான இடம்பெயர்தல்