Wednesday, December 16, 2015

பெண் துகள்கள்

உருவெடுக்க யோசித்து இரத்த ரணங்களாகவே யோனிவழி வெளியேறக் காத்திருந்த அந்தப் பிண்டம், ஏதோ அனிச்சையாய் கடந்து சென்ற கால் நாழிகைச் சிந்தனையின் பயணாக, இந்த ஆறடி மரங்கள் வாழும் கோளத்தில் கதறியபடி பிராணவாயுவை சுவாசித்தது.

சனியனுக்குக் காதுக்கு இரண்டு, மூக்குக்கு ஒன்னு, காலுக்கு இரண்டு, கைக்கு இரண்டு இன்னும் என்னன்னா மாதிரி, தங்கமா என்ன உருக்கக் காத்திருக்கோ இது. அப்பனின் கரிச்சலுக்கெல்லாம் செவிச்சாய்ந்தாலும் உள்ளுர ஏதும் எடுத்துக்கொள்ளாமல் காற்றில் கோலமிட்டுத் திரிகிறாள்.

ஓரடி இரண்டடி மூன்றடி நான்கடி ஐந்தடி வளருவதற்குள் ஐயாயிரம் கட்டுபாடுகள் விதித்துத் தகர்க்கப்பட்டிருக்கும். பருவம் வந்தவுடன் மீண்டும் விதிக்கப்பட்டிருக்கும். பூத்தப்பின் சுதந்திர வானில் எத்தனிக்க முயலும்போது பல மூடர்க்கூடங்கள் தனக்கான சிலந்தி வலைகளுடன் இரைக்காகப் பொழுதோட்டிக் காத்திருக்கும்.

அனைத்தும் கடந்து மனுஷியாகி உலாவுகையில், தெருவில் திரியும் மானுடர் அவரவற்குப் பிடித்தார் போல் உருவாக்கிய உருவங்களுக்குத் தானறியாமலே பிம்பமாகிறாள். குழந்தைகளுக்கு அக்காவாக, தாத்தாவிற்குத் தான் இளமையில் தவறவிட்ட காதலியாக, இளசுகளுக்குத் தேவதையாக, காமர்களுக்குத் தான் ஏறிப் பயணிக்கும் வாகனமாக. இவ்வாறாக அனுபவிக்கப்பட்ட பிம்பங்களை உடைத்து அவளாக நடக்கும் இப்பெண்களின் துகள்கள் அணுவெங்கும் பரவிக்கிடக்கிறது.

Monday, December 14, 2015

அம்மா

அம்மாவின் ஆகப்பெரும் ஏக்கங்களில் ஒன்று பேருந்தில் ஏறிய பிள்ளைக்கு இருக்கை கிடைத்ததா என்பது.

நான் மறந்த விசயங்களுள் அம்மா திருப்பி போடச் சொன்ன தோசையும் ஒன்று.

இளஞ்சூட்டோட நல்லெண்ணெய அம்மா உச்சந்தலைல தேய்க்கும் போது வருமே ஒரு சுகம்!

மூனு துணி துவைச்சதுக்கே வாயில நுரை தள்ளுதே, அம்மா லாம் வேற லெவல் தெய்வம்

உறங்கிக்கிடக்கும் உணர்வுகளை தட்டி எழுப்புவதில் அம்மா போடும் மிக்ஸிக்கு முதல் இடம்.

குழந்தை பெற்றும் என்றும் குழந்தையாகவே வாழும் ஜீவனுக்கு பெயர்தான் அம்மா.

வளர வளர தான் தெரிந்தது என் தோழி ஆயுள் முழுவதும் என்னுடனே வாழ்ந்திருக்கிறாள்!  

அம்மா/தங்கை/மனைவி யை வண்டியின் பின் அமர்த்திச் செல்லும் போது ஏற்படும் விபத்தில் தோன்றுவது தான் உண்மையான குற்ற உணர்வு.

 கண்டிப்பாக அவளுக்கு ஒரு ஆசை, விருப்பம், ஏக்கம் இருக்கும். கேட்டால் சொல்ல மாட்டா. விடாம கேளுங்க, தினமும் கேளுங்க. நிறைவேற்றுங்க  

ஆடம்பர வீடு தேவை இல்லை, சிறு வயதில் என் வீடாக இருந்த உன் சேலை போதும்  

அலாரம் வைத்தாலும் எழ மாட்டோம் என தெரிந்து இறைவன் படைத்த ஜீவன் அம்மா.

அம்மா வழியனுப்ப வேலைக்கு செல்வோர் பாக்கியசாலிகள்.

இவர்தான் அப்பா என உனக்கு அம்மா அறிமுகப்படுத்தும் வரையில் அவரும் அன்னியனே.

அதிக வலியெடுகின்ற போது "அம்மா" என்று கத்தி விடுகின்றது அனாதை குழந்தை.

Monday, December 7, 2015

மழை! வெள்ளம்! மக்கள்! உணவு! அரசியல்! #‎Cuddaloreflood‬ ‪#‎ChennaiFloods‬

மழை! வெள்ளம்! மக்கள்! உணவு! அரசியல்!
‪#‎Cuddaloreflood‬ ‪#‎ChennaiFloods‬
மழை என்றுமே வரம்தான், கடல் கொந்தளிப்பு சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் மட்டுமே இன்னல்கள் உண்டாக்கி அழிவை ஏற்படுத்தும் நிகழ்வுகள். அவைகூட ஏற்படுவதற்கு சில நாட்கள்/வாரங்கள் முன்பாகவே பொது அறிவிப்பு விடப்பட்டு அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுவர்.
ஆனால் இந்த மழைக்கு ஏன் இவ்வளவு சேதாரங்கள்? 100 வருடங்களில் இல்லாத மழை தான், ஆனால் சேதாரங்கள் ஏற்படுத்தும் மழையல்ல. நாம் போடும் கழிவுகள், நெகிழி, குப்பை போன்றவைகளால் ஏற்படும் குழாய் அடைப்புகள் மற்றும் முறையான வடிகால் அமைக்காத அரசு ....................... சரி அரசியல்ன்னு சொல்லுவாங்க.
மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றவுடன் எதுவும் யோசிக்காமல் உடனிருந்தவர்கள் உதவியுடன் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. ஆனால் முதலில் ஏற்கனவே களப்பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு முதலில் உதவலாம் என்று எண்ணி என்னால் இயன்ற பணவுதவியை அனுப்பிவைத்தேன்.
பாலசுப்ரமணியம் தர்மலிங்கம் Balasubramani Dharmalingam மற்றும் வாசுதேவன் பச்சிக்கன் Vasudevan Pachikkan - இவர்கள் ஏற்கனவே தனக்கான குழுவை தனித்தனியே அமைத்து சென்னையை நெருங்கியிருந்தனர்.
பிறகு என் நண்பர்களிடம் உதவி கோரினேன். கேட்டவுடன் முன்வந்து பணவுதவி அளித்த பின்வரும் உள்ளங்கள்
1. ஜனார்த்தனன் Jana Nanju
2. ஹரிஷ் பிரபு Harish Prabu
3. அப்துல் சம்சுதீன் Rasheed Bin Samsudeen
4. நரேஷ் Naresh தன்னுடைய பங்களிப்போடு தன்னுடைய பங்களிப்பையும் அனுப்பியிருந்தார்.

தங்களால் முடிந்த பணவுதவியை அனுப்பிவைத்தனர். இதுவரை சேர்ந்த தொகைக்கு பொருட்களை வாங்கிக்கொண்டு சென்னைக்கு செல்லலாம் என்று நினைக்கையில், சென்னைக்கு போதுமான அளவுக்கு நிவாரண பொருட்கள் உள்ளது கடலூர் தான் சென்னையை விட அதிக பாதிப்புக்குள்ளானது என தகவல் வந்தது.
அதற்குள் அலுவலகத்தில் பேசி நிதி திரட்டினோம், நாங்கள் எதிர்பார்த்தது 75000 ரூபாய் வரை சேரும் என, ஆனால் 4,00,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேர்த்து நல்ல உள்ளங்கள் மூலம் மனிதம் வாழ்கிறது என நிரூபித்தனர்.
சனி காலை பெங்கலூரிலிருந்து புறப்பட்டு கடலூரை சென்றடைந்தோம், நாங்கள் எதிர்பார்த்ததை விட நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பல இடங்களை வெள்ளம் அடித்துச் சென்றிருந்தது. பல கிராமங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. மழை மட்டும் விடாமல் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது.
மிகவும் பாதித்த பகுதிகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு முதலில் நிவாரணம் வழங்கலாம் என முடிவு செய்தோம்.
போகும் இடங்களில் ஆளுங்கட்சியினர் வாகனங்களை மறித்து அதில் ஜெயலலிதாவின் புகைப்படம் ஓட்டுகின்றனர் என்ற தகவல் வந்துகொண்டே இருந்தது. அதெப்படி வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிடவில்லை, ஒரு ஆறுதல் செய்தி இல்லை, ஓட்டு கேட்க வீட்டுக்குள் வரை வந்த தொண்டர்கள் கூட்டம் எங்கே? வெட்கமில்லாமல் இதற்கு மட்டும் எப்படி முன்வருகிறார்கள்? ஆத்திரங்கள் அனைத்தையும் காட்டும் நேரம் இதுவல்ல இப்போது தேவை அணைத்து பொருட்களும் மக்களை சேர வேண்டும்.
‪#‎அழகப்பாசமுத்திரம்‬ என்ற இடம் பல தொடர்புகளிலிருந்தும் துண்டிக்கப்பட்டிருந்தது, அங்கு சென்று மக்களிடம் நேரடியாக கொடுக்க முடிவெடுத்தோம். வழிநெடுங்கிலும் பார்க்குமிடமெல்லாம் தண்ணீர் வெள்ளம். எப்படியோ இடத்தை சென்றைந்து விநியோகிக்க ஆரம்பித்தோம் மாற்று உடை, உணவு, போர்வை என எதுவுமே இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஏதோ கிடைத்த மகிழ்ச்சி கண்களில் தெரிந்தது.
பகுதி பொருட்களை அங்கே விநியோகித்து பின்பு அண்ணன் சத்தியாவின் Sathiya Narayanan நண்பன் மற்றும் ஆசிரியர் கார்த்திக் ஒரு மாணவர் கூட்டத்தை தயார் நிலையில் வைத்திருந்தார். எனவே பகுதி பொருட்கள் அவர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்கள் என்ற மிகப்பெரிய ஊடகம், அதில் ட்விட்டர் எனக்கு எப்போவுமே சரியான பாதையை தான் காட்டியிருக்கிறது. இப்போதும் என் ட்விட்டர் நண்பர்கள் எனக்கு பல வழிகளில் உதவினர்.
பல நல்ல உள்ளங்கள், உதவிக்கரங்கள் ஆம் இன்னும் மனிதம் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.