Friday, February 24, 2017

பாலைவனமாகும் காவிரி படுகை

செயற்கை எரிவாயு தயாரித்தல் என்னும் பெயரில் காவிரி படுகையில் உள்ள விவசாய நிலங்களில் சில ஆயிரம் அடியில் மீத்தேன் வாயு(மணமற்ற வாயு) எடுக்க பலவருடங்களாக மத்திய அரசு முயற்சித்து வருகிறது. பல போராட்டங்களுக்கு இடையிலும் நெடுவாசலில் சில ஆழ்துளை கிணறுகள் நிறுவப்பட்டு எரிவாயு எடுக்க காத்திருப்பு நிலையில் உள்ளது.

இதை செய்யும்முன் அங்கு வசிக்கும் மக்களிடம் கருத்துக்கள் கேட்டார்களா? அவர்களுடன் கலந்து ஆலோசித்தார்களா? இல்லை. முற்றிலும் மறைக்கப்பட்டு இது அரங்கேறியுள்ளது. மாநில அரசுக்கு மீத்தேன் கசிவின் ஆபத்துக்கள் தெரியாதா என்ன? தெரிந்தும் அனுமதிக்க காரணம், எங்கோ ஏதோ நடந்தால் எனக்கென்ன என் சட்டைப்பை நிரம்பிவிட்டது என்ற ஒரே போக்கு மட்டும்தான். இதை பற்றி மாணவர்களுக்கும், ஏனைய மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை. விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் முயற்சி இது.



கூடங்குளம் அணுமின் நிலையம் வான்பார்த்து நிற்கிறது. சில காலங்களுக்கு முன் எவ்வளவு போராடியும் மக்களால் தடுக்க இயலாமல் போனது. கட்டிமுடித்த பிறகே மக்கள் போராட்டம் நடத்தினர், எனின் அங்கு என்ன வரப்போகிறது என்றே அவர்களிடமிருந்து மறைக்க பட்டிருக்க வேண்டும். அணுவுலையின் ஆபத்து பற்றி மேலோட்டமாய் சொல்லவேண்டும் என்றால் ஒரு 500வருடங்களுக்கு அதன் பாதிப்பு தொடரும். 1986ல் ருசியாவின் ப்ரிப்யாட் மாகாணத்தில் நடந்த அணுவுலை விபத்தில்(Chernobyl disaster) 4000பேர் கேன்சரால் இறந்துள்ளனர், போலவே சப்பை மூக்கு ஜப்பானில் 2011ம் ஆண்டில் நடந்த விபத்தில் 1,30,000 மக்கள் இடம்பெயர்க்கப்பட்டனர். இன்று வரை இரண்டு இடங்களிலும் கதிர் வீச்சுக்கான அபாய எச்சரிக்கை உள்ளது. அணுவின் ஆபத்தை கண்டுபிடித்துவிட்டு "I made one great mistake in my life" என்று தானே நொந்த ஐன்ஸ்டீன், வரலாற்று வியப்பின் உச்சம்.

மீத்தேன் இயற்கை எரிவாயு தானே, சொல்லப்போனால் அது வளிமண்டலத்துக்கு உகந்தது வேறு. ஆம் ஆனால் அது கரிம வாயுவுடன் கலக்கும் போதுதான் மேல்சொன்னது சாத்தியம்.

மாறாக கடந்த 20ஆண்டுகளில் கரிம வாயுவை விட மீத்தேன் 380 மடங்கு அதிகரித்துள்ளது. தை, மாசி மாதமே சுட்டெரிக்கும் வெப்பம் வர காரணம் இதுவே. ஆர்டிக் பிரதேசத்தில் "Artic Death Spiral/Methane Time Bomb" என்று அழைக்கப்படும் இவ்வெரிவாயு பல ஆயிரம் பனிப்பாறைகளை உருக்கி விட்டது. உலகின் தட்பவெட்ப மாறுதலில் முக்கிய பங்குவகிக்கும் ஆர்டிக் பிரதேசத்தை காக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுக்கொண்டே உள்ளது.



எனவே உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லா இடமாக மாற்றவல்ல இந்த திட்டத்தை ஏன் விவசாய ஜீவநாடியான காவிரி படுகையில் செய்ய வேண்டும்? அதுவும் விவசாயமே வாழ்க்கையாக கொண்டு வாழும் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இந்த திட்டதை அமல்படுத்தியுள்ளனர். நிலங்களை விற்றுவிட்டு ஓடுங்கள் பிழைக்க மாதாமாதம் பணம் தருகிறேன் என்பது போல உள்ளது அரசின் திட்டங்கள். சில மாதங்களுக்கு முன்பு விவசாயத்தை கைவிடுங்கள் என்று மோடி மஸ்தான் சொன்னது நினைவிருக்கலாம்.





இந்த திட்டத்திற்கு தி.மு.க 2010ல் அனுமதி வழங்கியது. திராவிட கட்சிகள் என்றாலே ஊழலும் கொள்ளையும் தான். மக்களை காக்கவோ, அவர்களின் உரிமையை வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவோ இக்கட்சிகள் என்றுமே முன்வந்ததில்லை. ஆதலால் நாமே போராடி நம் வாழ்வாதாரத்தை காப்போம். வளர்க விவசாயம், வாழ்க விவசாயி.

Tuesday, February 21, 2017

ஆதியோகி - ஒரு வனத்திருடன்

ஒரு அடர்ந்த காடு, பல கோடி உயிரினங்களுக்கு வாழ்வாதாரம். பல விலங்குகளுக்கு பசியாற்றும் சுனை சுரக்கும் வனம், போலவே மழையின் கீழ் உள்ள மக்களுக்கு குடிநீர் ஈயும் அட்சயப் பாத்திரம்.

ஒரு மனிதன் நாட்டை வெறுத்து காட்டிற்கு குடிபுகுகிறான், சில நாட்களுக்கு மரத்தடியில் தஞ்சம் கொள்கிறான். பிறகு கடும் குளிர், மழையிலிருந்து தன்னை காத்துக்கொள்ள சில மரங்களை வெட்டி ஒரு வீடு கட்டுகிறான். அப்போது அதை வாழ்வாதாரமாகக் கொண்ட சில பறவைகள், இன்னபிற உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இடம்பெயர்கிறது. அங்குள்ள பழங்கள், கீரைகள், காய்கறிகளை பறித்து பசியாறுகிறான்.

பின் தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை திருமணம் செய்து பிள்ளைகளை பெறுகிறான். பிள்ளைகள் வளர, ஓடியாடி விளையாட இன்னும் சிறிது இடம் தேவைப்படுகிறது. மேலும் சில மரங்களை வெட்டி தன் வீட்டை பெரிதுபடுத்துகிறான். தற்போது ஒரு 10குடும்பம் வாழுமளவு இடம் விஸ்தாரமாய் உள்ளது.

தன் குடும்பத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பணமீட்ட முடிவெடுக்கிறான். தனக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுள்ளதை பயன்படுத்தி, ஒரு லிங்கம் உருவாக்கி கோவில் காட்டுகிறான். இதன் மூலம் இன்னும் சில நூறு மரங்கள் வெட்டப்படுகின்றன. பல ஆயிரம் விலங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. ஒன்று இரண்டாய் வந்த மக்களின் கவனத்தை ஈர்க்க யோகா, ஆனந்த குளியல் என்னும் கொறலி வித்தைகளை காட்டுகிறான். மக்கள் மெல்ல குவிகின்றனர்.

அவர்கள் வந்துசெல்ல பாதை, இடம் ஆகியவை குறுகலாக உள்ளதை உணர்ந்து மேலும் சில மரங்களை வெட்டி பாதை அமைகிறான், பெரிய கூடாரங்கள் அமைகிறான். 5% வனம் அழிகிறது. மக்களின் தண்ணீர் தேவையை உணர்ந்து அங்குள்ள நீரூன்றின் பாதையை மாற்றி ஒரு குளம் உருவாக்கி அதில் கடக்குமாறு வழி செய்கிறான்.

தனக்கு அல்லக்கைகள் சிலரை தத்தெடுத்து, அவர்களை தன்னை சத்குரு, ஆதியோகி என்று பல புனைப்பெயர்களில் அழைக்கச்சொல்கிறான், அவர்கள் தங்க அங்கேயே ஒரு குடியிருப்பை கட்டிக்கொடுக்கிறான். 25% வனம் அழிந்துவிட்டது.


Digital முறைகளில் ஏமாற்ற CD, MP3, DVD போன்று பல வகைகளை கையாள்கிறான். இவ்வளவும் செய்ய தனி ஆளாய் இயலாது அரசின் உதவி தேவை, அரசுக்கு பணம் தேவை. அரசு என்றால் அங்குள்ள மக்கள் பிரதிநி அல்ல பிரதமர். அரசுக்கும் இவனுக்கும் உள்ள தொடர்பு இன்று பத்ம விபூஷன் வரை வளர்ந்திருக்கிறது. எனவே பிரதமர் வரை செல்வாக்கு உள்ளதென்றால் வெறும் ஆன்மீகம் மட்டுமா நடக்கும்? சில நாட்களுக்கு முன்பு பெண்களை மயக்கி மொட்டையடித்த சம்பவம் நினைவிருக்கலாம்.

இது வெள்ளியங்கிரி மலையில் 55ஆயிரம் சதுரமீட்டராக உயர்ந்து நிற்கும் உங்கள் ஈஷா யோகா - ஜக்கி வாசுதேவின் கதை. மைசூரில் பிறந்து வளந்தவர், மைசூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இல்லாத இடமா? புயல், ஜல்லிக்கட்டு, விவசாயி மரணத்திற்கெல்லாம் வராத பிரதமர் மகாசிவராத்திரிக்கு இந்த கொள்ளையனை காண வருகிறார்.

Sunday, February 19, 2017

பதஞ்சலி

பதஞ்சலி - இன்று Fast-moving consumer goods என்று உங்கள் சமையலறை தொடங்கி கழிவறை வரை வந்துவிட்டான் பாபா ராம்தேவ் எனும் ராம் கிருஷ்ணா யாதவ்.

முற்றிலும் இயற்கை தயாரிப்பு என்றால் அதிகபட்சம் ஒரு இரண்டு நாளுக்கு தாங்கும். முட்டை கலந்த மருதாணி என்றால் ஒருநாள் கழித்து கெட்டுவிடும், பிறகு எப்படி கெடாமல் 6 மாதத்துக்கு வைத்து விற்கின்றனர்? அவ்வளவும் ரசாயனம். நீங்கள் அன்றாடம் உபயோகிக்கும் அனைத்து shampooகளிலும் தான் இவ்வளவும் இருக்கிறதே என்றால் அவன் யோகா, இயற்கை என்றெல்லாம் உங்களை ஏமாற்றி வரவில்லை, இவன்தான் யோகா என்னும் பெயரில் வேரூன்றியுள்ளான்.


யோகா என்னும் கலை ஒரு கல்வி போலத்தான். நம்மிடையே புழங்கி இன்று பயன்பாட்டிலிருந்து வெகு தூரமுள்ளது யோகா.

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே
என தற்சிறப்புப் பாயிரதில் குறிப்பிட்டுள்ளனர். யோகா நிலையில் உள்ள பதஞ்சலி ஆண்டவரை பற்றி புகழ்ந்து பாடும் பாடலிது.


இயற்கை முறையில் விற்பனை செய்பவனால் எப்படி ஒரே வருடத்தில் 5000கோடி ரூபாய் லாபம் காண இயலும்? அதைவிட இயற்கையான அரசின் காதி பொருட்கள் ஏன் இவ்வளவு விற்கப்படவில்லை? கொள்ளையடிக்க பல வழிகள் உள்ளன அதில் இவன் கையாண்டது யோகா மற்றும் ஆன்மிகம். Future Group என்னும் Conglomerate வணிக முறை கொள்ளைக்கூட்டத்துடன் இணைந்து செயல்பட்டதின் பயணிது.

சில வருடங்களுக்கு முன்பு தான் நடத்திவந்த Divya Yoga Mandir Trustல் முறைகேடு நடப்பதாக போராடிய 155 நபர்களும் அந்நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டனர். பிறகு தான் நடத்திவந்த Divya Pharmacyல் உள்ள சில பொருட்களில் மனித எலும்பு மற்றும் மிருக உறுப்புக்கள் பயன்படுத்துவதை நிரூபித்த Brinda Karatஐ BJP மூலம் மிரட்டியது பல பேருக்கு தெரியாதது.
கண்மூடித்தனமாக எவரையும் நம்பாமல் சற்றே பகுத்தறிந்து பாருங்கள். எவன் திருடன் என்று நன்றாகத் தெரியும்.

Wednesday, February 15, 2017

பட்டி to ஹள்ளி

"செகத்தினிற்செல்லுந் தேசாந்திரிக் கவன் கற்ற வித்தை" என நீதிசாரம் கூறுகிறது. பயணப்படுதல் என்பது வித்தை. அனைவரும் பயணம் செய்கிறோம், இப்பயணங்களில் யாவும் ஒரு தேவை, ஒரு நோக்கம், ஒரு ஆதாயம் உள்ளது. ஆனால் இவை எதுவுமே இல்லாமல் உலகை அறிய பயணப்படுத்தல் ஒரு வரம். அப்படி பயணம் செய்தவர்களின் பெயர்கள் வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கப்பட்டுள்ளன, அப்படி பயணப்பட்டவர்களின் பெயர்களை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கிரேக்கர்கள், ரோமானியர்கள் என Leif Eriksson தொடங்கி Megasthenes, Colombus, Gama வரை இவ்வுலகறியும்.

"கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்கமுடியும்" என தேசாந்திரியில் #எஸ்ரா குறிப்பிடுகிறார்.

பல ஊர்களை சுற்றித் திரிந்து அங்கே வாழும் மக்களின் வாழ்வாதாரம், வாழ்வியல் முறை, கலாச்சாரம், இவைகளை கற்றல் என்பது அனைவராலும் செய்ய இயலாத ஓர் காரியம். Embrace of the Serpent என்னும் படத்தில் இரு காலகட்டத்தில் வாழும் நபரின் வாழ்வைப் பற்றியும், Baraka என்னும் ஆவணப்படத்தில் காண்பிக்கும் ஊர்களும் மக்களின் வாழ்க்கை முறையும் நாம் நினைத்துக்கூட பார்க்க இயலாது.

பயணத்தில் மிக முக்கியம் வரலாறு அறிதல். நம்மில் பெரும்பான்மையோருக்கு தங்களின் ஊரின் பெயர்க்காரணமே தெரியாது. இவ்வளவையும் ஏன் மல்லுக்கட்டி (மல்லு"க்"கட்டி இடையில் உள்ள க் எடுத்துவிட்டால் மல்லு கட்ட - ஒரு கேரள பெண்ணை திருமணம் செய்ய. தமிழ் எவ்வளவு இனிமையான மொழி ஒரு சந்திக்கு பல அர்த்தங்கள்) குறிப்பிடுகிறேன் என்றால் ஊர் பெயரில் உள்ள பட்டியை நீக்கிவிட்டு, அள்ளி/ஹள்ளி என மாற்றிவருகின்றனர் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் மாவட்டதில் உள்ளவர்கள்.

வரலாற்றை தலைகீழாக புரட்டிப்போடும் செயலிது. பட்டி - நாம் ஆடு அடைக்கும் இடம் இதன் மூலச்சொல்லே நம் ஊர்ன் பெயர்களில் உள்ள பட்டிகளுக்கு காரணம். இதை யார் சொல்லி மாற்றுகிறார்கள்?

இது கன்னடத் திணிப்பா? இல்லை அரசே செய்கிறதா? இதன் பின்புலம் என்னவென்று ஆராய்ந்து வேறொரு பதிப்பில் சொல்கிறேன்.

Tuesday, February 7, 2017

இந்தி திணிப்பு

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?



வீறுகொண்டு எழ வைத்த பாரதியின் வரிகள், சுதந்திர வேட்கை தனியும்போதெல்லாம் ஒருமுறை வாசித்தால் போதும், ரட்சகனின் நாக்கு பூச்சி போல நரம்புகள் புடைத்துவிடும்.

ஆதி தொட்டே தென்னிந்தியர்கள் மீதும், நம் கலாச்சாரம் மீதும், நம் ஒற்றுமையின் மீதும் இந்த காவி பக்தாக்களுக்கும், வடஇந்திய மாலுமிகளுக்கும் ஒரு கட்டற்ற வெறுப்பு உள்ளது.
அவர்களின் திணிப்பை மார்புடைத்து எதிர்த்த ஒரே கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம் மட்டுமே.

1937 முதலே Anti-Hindi imposition agitation தொடங்கி எதிர்த்து வந்தவர்கள் நாம். இன்று கர்நாடகாவிலும், ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும், கேரளாவிலும் வேரூன்றி பல்லிளிக்கிறது ஹிந்தி.

100 ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் அவர்களால் தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே நேரிடை மோதல் தோல்வியை தந்த பட்சத்தில் இப்போது அதிகார வழி உட்புகுகிறார்கள். இந்தி வழி கல்வி என ப்ரார்த்திமிக், பரிட்சையா, மத்தியமா, ராஷ்டிரபாஷா என வேடிக்கையான தேர்வுகளை நடத்தியும், நம் மாணவர்கள் கேள்வியையே பதிலாக எழுதிவிட்டு வருகின்ற கில்லாடிகள்😂
இப்போது மைல்கற்களிலும், பதாகைகளிலும் தமிழை பிடுங்கிவிட்டு, இந்தியில் எழுதுகிறார்கள்.

நம் மக்கள் பதிலுக்கு செய்தது இணைப்பில்

எண்ணெய் கசிவு

கறிக்காக, முத்துக்காக, பொக்கிஷத்துக்காக இன்னபிற செல்வங்களுக்காக கடல் தாயின் அங்கங்களை சிதைத்துவருகின்றனர். இப்போது எண்ணெய் கசிவு.
இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டன, இதிலென்ன இருக்கிறது எதிர்பாராத விபத்துதானே? நிலத்தில் இரண்டு lorryகள் மோதிக்கொள்வதில்லையா? ஏளனமாக கேட்கலாம்.
நிலத்தை ஆதாரமாக கொண்டு வாழும் உயிரிகளுக்கு பகுத்தறியும் திறன் உள்ளது, எதை குடிக்கவேண்டும் என்று நன்கு அறிந்திருக்கிறது, அனால் கடல்வாழ் உயிரிகளுக்கு வாழ்வாதாரமே நீர்தான் அந்நீரில் தான் உங்கள் கழிவுகளை கலக்கிறீர்கள்.
அன்று ஏற்பட்ட விபத்தால் ஏறக்குறைய பல நூறு வகையான கடல் வாழ் உயிரிகள் அழிந்துவிட்டன. மீன்கள், ஆமைகளே இதில் பெருவாரியாக பாதிக்கப்பட்ட உயிரிகள்.
"பெருமழை வரப்போகிறது
இந்த பூமி நனையப் போகிறது
நான் கரையப் போகிறேன்"
என்னும் கவிதை வரிகள் இயற்கையின் அழிவை பற்றி பேசுகிறது.
மனிதன் அழிக்கா விட்ட பொருட்கள் மிக சொற்பம், அதில் அவனும் அடக்கம்.

குளிர் பானங்கள்

#BanPepsi #BanCoke மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் #Bovonto வை ஏன் ஆதரிக்கணும்?
அவனும் அதே தாமிரபரணியிலிருந்து தான் தண்ணீர் உறிஞ்சப்போகிறான். செத்தாலும் உள்ளூர் விஷம் குடித்து சாக வேண்டும் என்ற பட்றா? இதை வழிமொழிபவர்கள் பாதிக்கு மேல் வெளிநாட்டு சரக்கை தேடித்தேடி குடிப்பவர்கள் தான்.
அந்நியர்கள் விரட்டப்பட வேண்டுமென்றால் குண்டூசி தொடங்கி விரட்டப்பட வேண்டும். போலவே நம் மக்களும் உணவு தொடங்கி பல வர்த்தகங்களை நாடு கடந்து செய்கின்றனர். சரவணபவன், மதுரை இட்லி என நாமும் பல நாடுகளில் வேரூன்றி உள்ளோம். அவன் நம்மை விரட்டினால்?
கேடு விளைவிக்கும் அந்நிய பொருட்களை தடைசெய்தலே சாலத்தகும். நூடுல்ஸ், சர்க்கரை, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் இவைகளை ஒழுங்கு படுத்துங்கள்.
இயற்கையை நாடுங்கள் அதுவே சிறந்த உணவு.

ஏறுதழுவல்

வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா? உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!
பாரதிதாசனின் வரிகள் இவை. எக்காலத்திற்கும் பொருந்தும்.
இன்று காலை #WeDidJallikattu #JusticeForJallikattu போன்ற HashTag இட்டு கீச்சியவர்கள் யாவரது கீச்சும் வெளியிடப்படவில்லை. மாறாக Duplicate tweet error வந்தது.
எனவே உண்மை எவ்வித ஊடாக சென்றாலும் அதை தடுப்பது மத்திய அரசின் இக்கால மட்டுமல்ல, பலகால பணி.
இதில் என்ன ஒரு கூத்து என்றால் அழியும் தருவாயில் இருந்த ஜல்லிக்கட்டு, சேவல்சண்டை, மாட்டுவண்டி பந்தயம் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சென்றாயிற்று, இனி அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நன்றி PETA (People for the Ethical Treatment of Animals) Narendra Modi
எனவே அவர்களை ஒடுக்கும் ஒரே ஆயுதம் நம்முடைய ஒற்றுமை ஒன்றே. ஒன்றுபடு! எக்காலத்திற்கும்.


#Jallikattu ஒற்றுமையில் நிரூபித்தது மட்டும் போதாது. கலையில், அறிவியலில், இலக்கியத்தில், கலாச்சாரத்தில் என அனைத்திலும் மேலோங்க வேண்டும்.
தொன்றுதொட்டு நம் கலாச்சாரம் தலைசிறந்தது என நாம் மட்டுமே பேசி வருகிறோம், 5000, 4000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் அடையாளங்கள் தென்பட துவங்கியுள்ளன. எனினும் அது உலகம் முழுதும் சென்று சேரவில்லை, இலக்கியம் படைத்தவர்கள், தீர்க்கமுடியாத நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தவர்கள், கலை, அறிவியல் ஞானம் படைத்தவர்கள் யாரும் அதை தாம் மட்டும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கும் போதித்தார்கள்.
2300 ஆண்டுகளுக்கு முன்பே முனிவரொருவர் கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார், 1748 தான் Jacques Daviel என்பவர் first modern European physician to do a eye surgery என தம்பட்டம் அடித்து உலகமே திரும்பி பார்த்தது.
புத்தக, கலை அறிவியல் அறிவை வளர்ப்போம் மீட்டும் ஓர் ஆதித் தமிழினம் செய்வோம்.

பெண் சுதந்திரம்

70ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது நிச்சயம் ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்று. இரவு பத்துமணிக்கு மேல் தனியாக ஒரு பெண் நடந்து செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பது விளக்க இயலாது.
தெரு, சந்துகளில் தான் பெரும்பாலும் வன்புணர்ச்சிகள் இடம்பெறுகிறது. CCTV camera இருந்ததால் இது போன்ற சம்பவம் நடந்தது அனைவருக்கும் தெரிய வந்தது, இல்லையேல் எப்படி இந்த நிகழ்வு நடந்தது புலப்பட்டிருக்கும்? அப்படியெல் இது போன்று கண்காணிக்காமல் எத்தனை நிகழ்வு நடந்திருக்கும்?
கடவுள் போன்று அனைத்து இடங்களிலும் காவலர்கள் கண்காணிக்கவியலாது உண்மை தான், ஆனால் நவயுக கடவுளான CCTV cameraவை முடிந்த வரை இதுபோன்ற இடங்களில் பொருத்தலாம்.
இவை அனைத்தும் தற்காப்பு முறையே, ஆனால் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க என்ன வழி? சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் இளவரசர் Turki Bin Saud Al-Kabirக்கு நிகழ்ந்தது நினைவிருக்கலாம். தண்டனைகள் தான் குற்றங்களை குறைக்கும் என்பது என் கருத்து.



Digital நாடகம்

#Demonetization எவ்வளவு சிறப்பான திட்டம்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றவுடன் வேக வேகமாக வரிசையில் நின்று தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றியவர்கள் யார் தெரியுமா?
இந்நாட்டின் ஏழைகளான அம்பானி, ரத்தன் டாட்டா, அதானி, குமார் பிர்லா, பொன்னவாளா, மிட்டல், ஷிவ் நாடார், பலோன்ஜி, ஆசிம் பிரேம்ஜி, திலிப் ஷங்க்வி, அமிதாப், ரஜினி (ஏன் எதற்கெடுத்தாலும் ரஜினியை உள்ளே இழுக்கிறீர்கள், அவர் என்னதான் செய்தார்? என்று யாராவது என்னை கேளுங்களேன்) இன்னபிற பழம்பெரும் சில்லறைகள்.
மற்றபடி விவசாயம் செய்யும் அன்றாட கூலிகளுக்கு, புதிய நோட்டுகள் அவர்கள் வீடுதேடி கட்டுக்கட்டாக குளியலறைக்கே வந்துவிட்டது.

2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குக்கே அதிகம் வரவில்லை, ஆனால் அதற்குள் Big Bazaar தன்னிடம் 2000 ரூபாய் உள்ளதென்றும் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும், SnapDeal வாடிக்கையாளர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை order செய்து கொள்ளலாம் அதற்கு 1 ரூபாய் service charge எடுத்துக்கொள்வோம் எனவும் அறிவிக்கின்றனர்.

வங்கிகள் செய்யவேண்டிய வேலையை செய்ய இவர்கள் யார்? இவர்களுக்கு எப்படி 2000 ரூபாய் நோட்டுகள் வந்தது? யார் கொடுத்தது இவர்களுக்கு?
இந்தியாவில் பிழைக்க corporateட்டாக இருக்க வேண்டும். விவசாயியாகவோ தினக்கூலியாகவோ இருந்தால் விடை உங்களுக்கே தெரியும்.. வாழ்க ஜனநாயகம்.