Tuesday, August 29, 2017

Spring, Summer, Fall, Winter... and Spring - உலகசினிமா ஒரு பார்வை


Bom yeoreum gaeul gyeoul geurigo bom(வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் மற்றும் வசந்தம்)

தென் கொரியாவின் தவிர்க்க இயலா இயக்குனராக உருவெடுத்திருக்கும் "கிம் டுக் கிம்" இயக்கியிருக்கிறார். ஒரு வசந்த காலத்தின் மாலையில் கையில் காப்பிக்கோப்பையுடன் காணவேண்டிய படம். முழு வாழ்க்கையை ஒரு சேர பார்வையிடுதல் போல் உள்ள காட்சியமைப்புகள் உயிரோட்டமுள்ளவை. படத்தின் காட்சிகள் அரங்கேறிய ஜூசஞ்சி ஏரி உங்கள் வறண்ட மனதில் பச்சையை நிரப்புகிறது.


இவ்விடத்தில் நாம் வாசித்தால் எப்படி இருக்கும் என அற்பமாய் நம் மனதுக்குள் தோன்றுமளவு அந்த இடத்தை இயற்க்கை தரிசித்துள்ளது. உண்மையில் அங்குள்ள பல நூறு வருடங்கள் கடந்த மரங்களின் தன்மையை பாதுகாக்க செயற்கையாய் அமைக்கப்பட்டுள்ளது அந்த ஏரி. படத்தில் காண்பிக்கப்படும் மரத்தாலான வீடு படத்திற்காக அமைக்கப்பட்டது.

5 பருவங்களாய் படத்தை பிரித்து, ஒவ்வொரு காலத்தின் முடிவிலும் பௌத்த கதைகளை வார்த்தைகளை விழுங்கி மௌனத்தால் சொல்கிறார் இயக்குனர். "காமம் மனிதனின் ஆசையை விழித்துக்கொள்ள வைக்கிறது, அதுவே கொலை செய்ய தூண்டுகிறது" என்பதை படத்தின் மைய கருத்தாக வைக்கிறார்.

மறு கரையில் உள்ள படகைக் கொண்டு எவ்வாறு அக்கரைக்கு துறவி வருகிறார், சீடனை கைது செய்துகொண்டு செல்லும்போது படகு நகராமல் நிக்க, துறவி கையசைத்ததும் நகர்தல் போன்றவற்றை தவ வலிமையில் எடுத்துக்கொள்வதா என தெரியவில்லை.

ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு உயிரினமும், அதனை உதவிக்கு கையாளும் விதமும் நுணுக்கம். இறந்த பிறகும் கூட துணியால் முகத்தை மூடிவரும் பெண்ணின் முகத்தை காட்டாதது, தான் செய்த பாவத்தை கழிப்பதற்காக மலை உச்சியில் தன்னை வருத்தி சீடன் வைத்த சிலை என தீர்மானமின்மையை நம்மிடம் கொடுத்துவிடுகிறார்.



உலகம் அதன் போக்கில் இயங்கினாலும் மனிதன் பாவம் செய்வதை நிறுத்த மாட்டான் என கதையை முடிக்கிறார்.

படத்தை மேலும் விலக்கினால் எதையுமே தவிர்க்க இயலாது. படத்தில் புல்பூண்டும் கதை சொல்கிறது, படமும் கதை சொல்கிறது.





#BomYeoreumGaeulGyeoulGeurigoBom #SpringSummerFallWinterandSpring #KimKi
duk


Saturday, August 26, 2017

சாமியார்கள் சல்லிப்பயல்கள்

மனித நாகரிகம் பல பரிமாணங்களை தாண்டி தற்போதுள்ள நிலைக்கு வந்துள்ளது. உடல்மறைத்து உடையணிவதில்லை நாகரிகம், நல்லது தீயது எது என பகுத்தறிதலே. இவ்வாறு பகுத்தறிவதற்கு படிப்பு அவசியமில்லை நமக்கு, கொடுக்கப்பட்ட பொதுவான ஆறாம் அறிவே போதும்.

நம் பரம்பரையில் உள்ள முன்னோர்களை நாம் வணங்குவது அனைவருக்கும் தெரிந்ததே, சற்று வயதானவர்களுக்கு நம் முன்னோர்களை வணங்குகிறோம் என தெரியும். குழந்தைகளுக்கோ யார் எவரென தெரியாமல், பெரியவர்கள் வணங்குகிறார்கள் என அவர்களை பின்பற்றுவார்கள். சில குழந்தைகள் ஆர்வமிகுதியால் யாரை வணங்குகிறோம் எனக்கேட்டால் "பேசாம சாமி கும்பிடு" என கட்டுப்படுத்திவிடுகிறார்கள். குழந்தையும் சாமி என எண்ணி கும்பிடுகிறது. இவ்வாறே இன்று நாம் வணங்கும் கடவுள்கள் உருவாகியுள்ளது.

இன்று பல கோடி லாபமீட்டும் தொழிலாக உருவெடுத்துள்ள இந்த பக்தி தொழிலில், நமக்கும் நாம் வேண்டுபவர்களுக்கும் இடையில் வந்தவர்கள் தான் இந்த சாமியார்கள். சிலர் உண்மையில் ஆசைகளை துறந்து சன்யாசியாகவோ/சாமியாராகவோ இருக்கிறார்கள், ஆனால் மற்றும் சிலரோ நித்தியானந்தா போலவோ பிரேமானந்தா போலவோ மகத்தான சல்லிப்பயலாக உள்ளனர். இவர்கள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடமிருந்து பணமோ, பொருளோ பிடுங்கிக்கொள்கிறார்கள். பெண்கள் என்றால் தன் ஆசைக்கு இணங்க வைக்கிறார்கள்.


#GurmeetRamRahimSingh இந்த பட்டியலில் இன்னுமொரு மகா மட்டமான சல்லிப்பயல், ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு தற்போது 15வருடங்கள் கழித்து, அவன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது(குறிப்பு 15 வருடங்கள் கழித்து). தன்னை கற்பழித்துவிட்டதாக ஒரு பெண், மொட்டை கடிதத்தை அப்போதைய பிரதமரான வாஜ்பாய்க்கு அனுப்பினார். அந்த கடித்தை தான் நடத்தி வந்த "பூரா சச்" என்ற பத்திரிக்கையில் #RamChanderChhatrapati வெளியிட்டார். வெளியிட்ட சில நாட்களில் அந்த சாமியாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் ராம் சந்தர்.

15 வருடங்களாக விசாரணை மட்டுமே நடத்தி காலதாமதம் செய்துவந்துள்ளது. பாஜகவால் மட்டும் தான் இப்படி ஒரு நிலையை தந்துவிட முடியும். நாட்டையும் நாட்டு மக்களையும் பின்நோக்கி செலுத்துகிறது பாஜக. தற்போது குற்றவாளி என தீர்ப்பு வெளிவந்த சில நிமிடங்களில் வன்முறை வெடித்து இதுவரை 30 உயிரை பறித்துள்ளது.மேற்கு வங்கத்தில் வருமான வரி சோதனைக்கு அவ்வளவு ராணுவத்தை அனுப்பதெரிந்த மத்திய அரசுக்கு இந்த கலவரத்தை கட்டுப்படுத்த ஒரு போலிஸையோ ராணுவத்தையோ அனுப்ப முடியவில்லை?
காவிகளும் பாஜகவும் ஒன்னுன்னு தெரியாதவனே மண்ணு தான். மோடிக்கு வாக்களித்த நீங்கள் ஒவ்வொருவரும் குற்ற உணர்ச்சியில் மூழ்கும் நேரமிது.

Thursday, August 10, 2017

நாளை மற்றுமொரு நாளே


மனிதனை பற்றி கூறவேண்டுமென்றால் "மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" என கூறிய ஜி.நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே" ஒரு சராசரி மனிதனின் ஒரு நாளை அழகாய் சித்தரிக்கிறது.

பாலுணர்வுடன் வாழ்க்கையை அழகாக எடுத்துரைக்க இயலும் வெகுசில எழுத்தாளர்களில் நாகராஜனும் ஒருவர் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
 


நாகராஜனின் கதாப்பாத்திரங்கள் அவர்களாக இருக்கிறார்கள், மனிதனின் போலி முகங்களை கிழித்தெறிகிறார்கள், முகத்தில் தோன்றும் வேண்டாவெறுப்பான புன்னகையை போலி என்கிறார்கள், நேர்மையாக இவ்வுலகில் எந்த காரியத்தையும் செய்யவியலாது என உணர்ந்தவர்கள்.
 
அடித்தட்டு மக்களாக நகரின் ஒதுக்குப்புறத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வு சேமிப்பு இல்லாதது, அவர்களுக்கு புவிசார்ந்த கோட்பாடுகள் இல்லை, உலகத்தின் இயக்குவிசை பற்றிய சிந்தனைகள் இல்லை, நீங்கள் ஓய்வு நேரங்களில் பரிதாபப்பட்டு பிறரிடம் விவாதிப்பதற்கான எல்லா தகுதிகளையும் பெற்றுள்ளனர்.

மனைவியை தொழிலுக்கு அனுப்பும் கணவன், மந்திரத்தால் குணமடையாது இறந்த குழந்தை என பெருங்கொடூரமான சம்பவங்களை தன் நாளில் ஒரு சம்பவமாக கடக்கின்றனர். இங்கே வலுத்தது தான் வாழும். வலுத்ததாக வாழ இயலாது என தெரிந்து வாழ்க்கையை வாழ்ந்தால் போதும் என வாழ்பவர்களின் ஒரு நாளத்திய  போராட்டமே "நாளை மற்றுமொரு நாளே"

இவரின் எழுத்தில் 80களின் மெட்ராஸ் மிளிர்கிறது. ஷெனாய் நகரின் எழில், அதன் மரமடர்ந்த சாலைகள், குதிரை வண்டி என அப்போதைய மெட்ராஸ் சென்னையாக தளிரத் தொடங்கிய நேரமது. தற்போது பூசப்பட்டுள்ள அரிதாரத்தை அழகாக அழித்துக்காட்டுகிறார்.

முன்னுரையில் ஜே.பி.சாணக்யாவின் புனைவையே ஒரு சிறுகதையாய் எழுதலாம் போலிருக்கிறது.
 
#NaalaiMatrumoruNaale #நாளைமற்றுமொருநாளே