Thursday, August 10, 2017

நாளை மற்றுமொரு நாளே


மனிதனை பற்றி கூறவேண்டுமென்றால் "மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" என கூறிய ஜி.நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே" ஒரு சராசரி மனிதனின் ஒரு நாளை அழகாய் சித்தரிக்கிறது.

பாலுணர்வுடன் வாழ்க்கையை அழகாக எடுத்துரைக்க இயலும் வெகுசில எழுத்தாளர்களில் நாகராஜனும் ஒருவர் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
 


நாகராஜனின் கதாப்பாத்திரங்கள் அவர்களாக இருக்கிறார்கள், மனிதனின் போலி முகங்களை கிழித்தெறிகிறார்கள், முகத்தில் தோன்றும் வேண்டாவெறுப்பான புன்னகையை போலி என்கிறார்கள், நேர்மையாக இவ்வுலகில் எந்த காரியத்தையும் செய்யவியலாது என உணர்ந்தவர்கள்.
 
அடித்தட்டு மக்களாக நகரின் ஒதுக்குப்புறத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வு சேமிப்பு இல்லாதது, அவர்களுக்கு புவிசார்ந்த கோட்பாடுகள் இல்லை, உலகத்தின் இயக்குவிசை பற்றிய சிந்தனைகள் இல்லை, நீங்கள் ஓய்வு நேரங்களில் பரிதாபப்பட்டு பிறரிடம் விவாதிப்பதற்கான எல்லா தகுதிகளையும் பெற்றுள்ளனர்.

மனைவியை தொழிலுக்கு அனுப்பும் கணவன், மந்திரத்தால் குணமடையாது இறந்த குழந்தை என பெருங்கொடூரமான சம்பவங்களை தன் நாளில் ஒரு சம்பவமாக கடக்கின்றனர். இங்கே வலுத்தது தான் வாழும். வலுத்ததாக வாழ இயலாது என தெரிந்து வாழ்க்கையை வாழ்ந்தால் போதும் என வாழ்பவர்களின் ஒரு நாளத்திய  போராட்டமே "நாளை மற்றுமொரு நாளே"

இவரின் எழுத்தில் 80களின் மெட்ராஸ் மிளிர்கிறது. ஷெனாய் நகரின் எழில், அதன் மரமடர்ந்த சாலைகள், குதிரை வண்டி என அப்போதைய மெட்ராஸ் சென்னையாக தளிரத் தொடங்கிய நேரமது. தற்போது பூசப்பட்டுள்ள அரிதாரத்தை அழகாக அழித்துக்காட்டுகிறார்.

முன்னுரையில் ஜே.பி.சாணக்யாவின் புனைவையே ஒரு சிறுகதையாய் எழுதலாம் போலிருக்கிறது.
 
#NaalaiMatrumoruNaale #நாளைமற்றுமொருநாளே

No comments:

Post a Comment