Tuesday, August 29, 2017

Spring, Summer, Fall, Winter... and Spring - உலகசினிமா ஒரு பார்வை


Bom yeoreum gaeul gyeoul geurigo bom(வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் மற்றும் வசந்தம்)

தென் கொரியாவின் தவிர்க்க இயலா இயக்குனராக உருவெடுத்திருக்கும் "கிம் டுக் கிம்" இயக்கியிருக்கிறார். ஒரு வசந்த காலத்தின் மாலையில் கையில் காப்பிக்கோப்பையுடன் காணவேண்டிய படம். முழு வாழ்க்கையை ஒரு சேர பார்வையிடுதல் போல் உள்ள காட்சியமைப்புகள் உயிரோட்டமுள்ளவை. படத்தின் காட்சிகள் அரங்கேறிய ஜூசஞ்சி ஏரி உங்கள் வறண்ட மனதில் பச்சையை நிரப்புகிறது.


இவ்விடத்தில் நாம் வாசித்தால் எப்படி இருக்கும் என அற்பமாய் நம் மனதுக்குள் தோன்றுமளவு அந்த இடத்தை இயற்க்கை தரிசித்துள்ளது. உண்மையில் அங்குள்ள பல நூறு வருடங்கள் கடந்த மரங்களின் தன்மையை பாதுகாக்க செயற்கையாய் அமைக்கப்பட்டுள்ளது அந்த ஏரி. படத்தில் காண்பிக்கப்படும் மரத்தாலான வீடு படத்திற்காக அமைக்கப்பட்டது.

5 பருவங்களாய் படத்தை பிரித்து, ஒவ்வொரு காலத்தின் முடிவிலும் பௌத்த கதைகளை வார்த்தைகளை விழுங்கி மௌனத்தால் சொல்கிறார் இயக்குனர். "காமம் மனிதனின் ஆசையை விழித்துக்கொள்ள வைக்கிறது, அதுவே கொலை செய்ய தூண்டுகிறது" என்பதை படத்தின் மைய கருத்தாக வைக்கிறார்.

மறு கரையில் உள்ள படகைக் கொண்டு எவ்வாறு அக்கரைக்கு துறவி வருகிறார், சீடனை கைது செய்துகொண்டு செல்லும்போது படகு நகராமல் நிக்க, துறவி கையசைத்ததும் நகர்தல் போன்றவற்றை தவ வலிமையில் எடுத்துக்கொள்வதா என தெரியவில்லை.

ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு உயிரினமும், அதனை உதவிக்கு கையாளும் விதமும் நுணுக்கம். இறந்த பிறகும் கூட துணியால் முகத்தை மூடிவரும் பெண்ணின் முகத்தை காட்டாதது, தான் செய்த பாவத்தை கழிப்பதற்காக மலை உச்சியில் தன்னை வருத்தி சீடன் வைத்த சிலை என தீர்மானமின்மையை நம்மிடம் கொடுத்துவிடுகிறார்.



உலகம் அதன் போக்கில் இயங்கினாலும் மனிதன் பாவம் செய்வதை நிறுத்த மாட்டான் என கதையை முடிக்கிறார்.

படத்தை மேலும் விலக்கினால் எதையுமே தவிர்க்க இயலாது. படத்தில் புல்பூண்டும் கதை சொல்கிறது, படமும் கதை சொல்கிறது.





#BomYeoreumGaeulGyeoulGeurigoBom #SpringSummerFallWinterandSpring #KimKi
duk


Saturday, August 26, 2017

சாமியார்கள் சல்லிப்பயல்கள்

மனித நாகரிகம் பல பரிமாணங்களை தாண்டி தற்போதுள்ள நிலைக்கு வந்துள்ளது. உடல்மறைத்து உடையணிவதில்லை நாகரிகம், நல்லது தீயது எது என பகுத்தறிதலே. இவ்வாறு பகுத்தறிவதற்கு படிப்பு அவசியமில்லை நமக்கு, கொடுக்கப்பட்ட பொதுவான ஆறாம் அறிவே போதும்.

நம் பரம்பரையில் உள்ள முன்னோர்களை நாம் வணங்குவது அனைவருக்கும் தெரிந்ததே, சற்று வயதானவர்களுக்கு நம் முன்னோர்களை வணங்குகிறோம் என தெரியும். குழந்தைகளுக்கோ யார் எவரென தெரியாமல், பெரியவர்கள் வணங்குகிறார்கள் என அவர்களை பின்பற்றுவார்கள். சில குழந்தைகள் ஆர்வமிகுதியால் யாரை வணங்குகிறோம் எனக்கேட்டால் "பேசாம சாமி கும்பிடு" என கட்டுப்படுத்திவிடுகிறார்கள். குழந்தையும் சாமி என எண்ணி கும்பிடுகிறது. இவ்வாறே இன்று நாம் வணங்கும் கடவுள்கள் உருவாகியுள்ளது.

இன்று பல கோடி லாபமீட்டும் தொழிலாக உருவெடுத்துள்ள இந்த பக்தி தொழிலில், நமக்கும் நாம் வேண்டுபவர்களுக்கும் இடையில் வந்தவர்கள் தான் இந்த சாமியார்கள். சிலர் உண்மையில் ஆசைகளை துறந்து சன்யாசியாகவோ/சாமியாராகவோ இருக்கிறார்கள், ஆனால் மற்றும் சிலரோ நித்தியானந்தா போலவோ பிரேமானந்தா போலவோ மகத்தான சல்லிப்பயலாக உள்ளனர். இவர்கள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடமிருந்து பணமோ, பொருளோ பிடுங்கிக்கொள்கிறார்கள். பெண்கள் என்றால் தன் ஆசைக்கு இணங்க வைக்கிறார்கள்.


#GurmeetRamRahimSingh இந்த பட்டியலில் இன்னுமொரு மகா மட்டமான சல்லிப்பயல், ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு தற்போது 15வருடங்கள் கழித்து, அவன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது(குறிப்பு 15 வருடங்கள் கழித்து). தன்னை கற்பழித்துவிட்டதாக ஒரு பெண், மொட்டை கடிதத்தை அப்போதைய பிரதமரான வாஜ்பாய்க்கு அனுப்பினார். அந்த கடித்தை தான் நடத்தி வந்த "பூரா சச்" என்ற பத்திரிக்கையில் #RamChanderChhatrapati வெளியிட்டார். வெளியிட்ட சில நாட்களில் அந்த சாமியாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் ராம் சந்தர்.

15 வருடங்களாக விசாரணை மட்டுமே நடத்தி காலதாமதம் செய்துவந்துள்ளது. பாஜகவால் மட்டும் தான் இப்படி ஒரு நிலையை தந்துவிட முடியும். நாட்டையும் நாட்டு மக்களையும் பின்நோக்கி செலுத்துகிறது பாஜக. தற்போது குற்றவாளி என தீர்ப்பு வெளிவந்த சில நிமிடங்களில் வன்முறை வெடித்து இதுவரை 30 உயிரை பறித்துள்ளது.மேற்கு வங்கத்தில் வருமான வரி சோதனைக்கு அவ்வளவு ராணுவத்தை அனுப்பதெரிந்த மத்திய அரசுக்கு இந்த கலவரத்தை கட்டுப்படுத்த ஒரு போலிஸையோ ராணுவத்தையோ அனுப்ப முடியவில்லை?
காவிகளும் பாஜகவும் ஒன்னுன்னு தெரியாதவனே மண்ணு தான். மோடிக்கு வாக்களித்த நீங்கள் ஒவ்வொருவரும் குற்ற உணர்ச்சியில் மூழ்கும் நேரமிது.

Thursday, August 10, 2017

நாளை மற்றுமொரு நாளே


மனிதனை பற்றி கூறவேண்டுமென்றால் "மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" என கூறிய ஜி.நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே" ஒரு சராசரி மனிதனின் ஒரு நாளை அழகாய் சித்தரிக்கிறது.

பாலுணர்வுடன் வாழ்க்கையை அழகாக எடுத்துரைக்க இயலும் வெகுசில எழுத்தாளர்களில் நாகராஜனும் ஒருவர் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
 


நாகராஜனின் கதாப்பாத்திரங்கள் அவர்களாக இருக்கிறார்கள், மனிதனின் போலி முகங்களை கிழித்தெறிகிறார்கள், முகத்தில் தோன்றும் வேண்டாவெறுப்பான புன்னகையை போலி என்கிறார்கள், நேர்மையாக இவ்வுலகில் எந்த காரியத்தையும் செய்யவியலாது என உணர்ந்தவர்கள்.
 
அடித்தட்டு மக்களாக நகரின் ஒதுக்குப்புறத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வு சேமிப்பு இல்லாதது, அவர்களுக்கு புவிசார்ந்த கோட்பாடுகள் இல்லை, உலகத்தின் இயக்குவிசை பற்றிய சிந்தனைகள் இல்லை, நீங்கள் ஓய்வு நேரங்களில் பரிதாபப்பட்டு பிறரிடம் விவாதிப்பதற்கான எல்லா தகுதிகளையும் பெற்றுள்ளனர்.

மனைவியை தொழிலுக்கு அனுப்பும் கணவன், மந்திரத்தால் குணமடையாது இறந்த குழந்தை என பெருங்கொடூரமான சம்பவங்களை தன் நாளில் ஒரு சம்பவமாக கடக்கின்றனர். இங்கே வலுத்தது தான் வாழும். வலுத்ததாக வாழ இயலாது என தெரிந்து வாழ்க்கையை வாழ்ந்தால் போதும் என வாழ்பவர்களின் ஒரு நாளத்திய  போராட்டமே "நாளை மற்றுமொரு நாளே"

இவரின் எழுத்தில் 80களின் மெட்ராஸ் மிளிர்கிறது. ஷெனாய் நகரின் எழில், அதன் மரமடர்ந்த சாலைகள், குதிரை வண்டி என அப்போதைய மெட்ராஸ் சென்னையாக தளிரத் தொடங்கிய நேரமது. தற்போது பூசப்பட்டுள்ள அரிதாரத்தை அழகாக அழித்துக்காட்டுகிறார்.

முன்னுரையில் ஜே.பி.சாணக்யாவின் புனைவையே ஒரு சிறுகதையாய் எழுதலாம் போலிருக்கிறது.
 
#NaalaiMatrumoruNaale #நாளைமற்றுமொருநாளே

Thursday, June 15, 2017

மனித கழிவுகள்

Ever wonder who cleans your shit! yes another human like you.

மனித கழிவுகளை மனிதன் அகற்றவேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டு விட்டோம் என அரசாங்கமோ, வெகுஜெனமோ சொல்கிறார்கள். உண்மையில் நீங்கள் தான் காரணம். ஆம் நீங்கள்.

சாதாரன மிட்டாய் காகிதத்தை தெருவில் வீசுவதில் தொடங்குகிறது இந்த குப்பை கலாச்சாரம். சுத்தமான ஒரு இடத்தை குப்பைக்குவியலாக்குவது எளிது, அது அனைவராலும் இயலும். உங்களை மாதிரியாகக் கொண்டு பலரும் அதே இடத்தில குப்பைகளை கொட்டியப்பின், அதே குப்பைக்குவியலில் நீங்கள் வீசிய காகிதத்தை மட்டும் பொறுக்க சொன்னால் கூட அவ்வளவு குப்பையும் புரட்டி நீங்கள் வீசியதை எடுப்பீர்களா? இல்லை அந்த குப்பை குவியலைத்தான் கையால் தொடுவீர்களா? வெள்ளை கைக்குட்டை கொண்டு மூக்கை மூடி கடந்து செல்வீர்கள்.

பின் உங்களின் மலம், உங்கள் மருத்துவ கழிவுகள் மற்றும் உங்கள் குடும்பத்தின் கழிவுகளை சுமக்க அவர்களுக்கு என்ன விதி? இல்லை அவர்கள் அதற்கென்றே பிறந்தார்களா? அது அவர்களது பணி, அதற்காகத்தான் அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என சொல்லாதீர்கள்.
இவ்வேலைக்கு பணி உருவாக்கியதே அரசின் பெரும் தவறு.

ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது முற்றிலும் தொகுக்கப்பட்ட கழிவுகளை வேறு இடம் சேர்ப்பதற்கு வேண்டுமானால் பணியாளர்களை அமர்த்தலாம், அமர்த்தவேண்டும். பிற நாடுகளில் அது தான் வழக்கம்.

உங்கள் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவை எதனை பேர் பிரித்து தொகுத்து அனுப்புகிறீர்கள்? எவரும் இல்லை. மலக்குழியில் விசவாயு தாக்கி உயிரிழந்தார் என்பது உங்களுக்கு செய்தி, அவர்கள் குடும்பத்திற்கு அது இழப்பு. இறந்தவர் ஒரு தந்தையாக இருக்கலாம், அவரை நம்பி 4-5 பேர் இருக்கலாம், அவர் கொண்டுவரும் தினக்கூலிதான் அவர்கள் உலைவைக்கும் காசாக இருக்கலாம்.

Human Scavenging மனித கழிவுகள்


இதில் ஜாதி வேற்றுமைகளை களைந்தெறியுங்கள், மனிதம் கொண்டு சிந்தித்தால் மெல்ல மெல்ல இது பற்றிய புரிதல் வரும். முலையூட்டும் போதே இதை அடுத்த தலைமுறைக்கு கற்பியுங்கள், இனியாவது இந்த அவலம் நடவாமல் இருக்கட்டும். ஓங்கட்டும் மனிதம்.
வாழ்த்துக்கள் திவ்யா. நல்ல முன்னெடுப்பு.

Kakkoos Documentary Film Official Release | Direction - Divya


#HumanScavenging #மனிதகழிவுகள் 

Wednesday, May 31, 2017

வாழும் பிண உதாரணங்கள்

மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தடை. நான் என்ன சாப்பிடவேண்டும் என்பதை இங்கே யார் தீர்மாணிப்பது? அப்போது இது ஜனநாயக நாடில்லையா? சர்வாதிகார நாடா? இறைச்சி என வந்துவிட்டால் ஆடென்ன மாடென்ன அனைத்தும் உயிர் தானே. எனில் பொதுவாக இறைச்சிக்கு தடை என்றல்லவா விதி வந்திருக்க வேண்டும், அவர்களுக்கு மாடு பிடிப்பதால் மாட்டிறைச்சிக்கு தடையாம். முதலில் நீங்கள் அணிந்துள்ள மாட்டுத்தோலால் செய்யப்பட்ட அரைக்கச்சு, செருப்பு போன்றவற்றை அணிவதை நிறுத்துங்கள், அல்லது அதற்கு தடை விதியுங்கள்.
சற்றே இறங்கி ஆராய்ந்தால் தடைக்கான காரணம் விளங்கும். தென்னிந்தியாவில் சங்கி மங்கிகளால் எப்பாடுபட்டும் வேரூன்ற முடியவில்லை, ஆதலால் அவர்கள் கையில் உள்ள அதிகார பாய்ச்சல் எதுவரை செல்கிறது என காணுவதற்கான முன்னோட்டம் இது.
தென்னிந்தியாவில் தான் அதிக இறைச்சி புழக்கம் உள்ளது.
இதில் எதிர்பாராத விதமாக நடந்தது 5 மாநிலங்களின் ஒற்றுமை குமுறல்கள்.
இந்த விவகாரத்தில் முதுகெலும்பு இல்லாமல் எப்போதும் போல அடிமையாய் நின்றது தமிழக அரசு மட்டுமே. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கடிதம்
https://www.facebook.com/PinarayiVijayan/posts/1383532648405228
பதவியாசை பிடித்த எந்த அரசியல்வாதியும் மக்களுக்கு சேவை செய்ய மாட்டார்கள், நாம் தேர்ந்தெடுக்காத இந்த EPS, OPSம் ஓர் வாழும் பிண உதாரணங்கள்.

Wednesday, May 24, 2017

தற்கொலை எண்ணம்!

வாழ்வதற்கான பிடிப்பை தேடி முடிவற்ற
சாலைகளில் அலைகிறான்.
சில நாட்களாகவே தாயாட்டத்தில் தாயம்
விழும் பிரச்சனையால் அவதிபட்டு வந்தான்,
ஆடுபுலி ஆட்டத்தில் கூட அவனை எளிதில்
வெட்டிவிடுகின்றனர்.
உறுப்படாதவன் என தன்னை அழைப்பதில்
ஒரு பொருள் உள்ளதாய் எண்ணினான்.
தன் எருமை வாரம் 2000 ஈட்டுவதாக
பால்காரர் சொன்னதில் அவனுக்கு
தற்கொலை எண்ணம் மேலோங்கியிருக்கலாம்.
தண்டவாளத்தின் கோடுகளில் மனதை
செலுத்தி 1000 முறை இறந்து பார்த்தான்.
தூக்குக்கயிற்றின் அடியில் முக்காலி
கிடந்ததாய் கண்டவர்கள் சொன்னார்கள்.

Monday, April 24, 2017

இன்றிரவு என்னால் நிம்மதியாய் உறங்க இயலும்.

என் உடையவளே என் காதலே
உன் முடிவற்ற கண்களின் பீடிப்பில்
இருந்து என்னை விடுவித்துக்கொண்டேன்
இலையுதிர்காலத்தின் ஏகாந்தத்தை கொண்ட
உன் இருப்பின் சுகத்திலிருந்து விடுபட்டேன்
மழைநாளில் சாளரத்தின் வழி கண்ட அந்த
இன்னொரு உலகத்தில்தான் தற்போது என்
இருப்பு இருக்கக்கூடும்.
விரைவில் இவ்விடம் நிரந்தரம் கொள்ளலாம்
இவ்விடம் தூதுமடலுக்கான சாத்தியங்களற்று
விளங்குகிறது.
காற்றில் அலைய விட்டிருக்கும் இத்தகவல்
உன்னை அடையும் என்ற நம்பிக்கையில்
இன்றிரவு என்னால் நிம்மதியாய் உறங்க இயலும்.

என்னை அடையும் வழி உனக்குத் தெரியும்
வந்து சேர்.