தென் கொரியாவின் தவிர்க்க இயலா இயக்குனராக உருவெடுத்திருக்கும் "கிம் டுக் கிம்" இயக்கியிருக்கிறார். ஒரு வசந்த காலத்தின் மாலையில் கையில் காப்பிக்கோப்பையுடன் காணவேண்டிய படம். முழு வாழ்க்கையை ஒரு சேர பார்வையிடுதல் போல் உள்ள காட்சியமைப்புகள் உயிரோட்டமுள்ளவை. படத்தின் காட்சிகள் அரங்கேறிய ஜூசஞ்சி ஏரி உங்கள் வறண்ட மனதில் பச்சையை நிரப்புகிறது.
இவ்விடத்தில் நாம் வாசித்தால் எப்படி இருக்கும் என அற்பமாய் நம் மனதுக்குள் தோன்றுமளவு அந்த இடத்தை இயற்க்கை தரிசித்துள்ளது. உண்மையில் அங்குள்ள பல நூறு வருடங்கள் கடந்த மரங்களின் தன்மையை பாதுகாக்க செயற்கையாய் அமைக்கப்பட்டுள்ளது அந்த ஏரி. படத்தில் காண்பிக்கப்படும் மரத்தாலான வீடு படத்திற்காக அமைக்கப்பட்டது.
5 பருவங்களாய் படத்தை பிரித்து, ஒவ்வொரு காலத்தின் முடிவிலும் பௌத்த கதைகளை வார்த்தைகளை விழுங்கி மௌனத்தால் சொல்கிறார் இயக்குனர். "காமம் மனிதனின் ஆசையை விழித்துக்கொள்ள வைக்கிறது, அதுவே கொலை செய்ய தூண்டுகிறது" என்பதை படத்தின் மைய கருத்தாக வைக்கிறார்.
மறு கரையில் உள்ள படகைக் கொண்டு எவ்வாறு அக்கரைக்கு துறவி வருகிறார், சீடனை கைது செய்துகொண்டு செல்லும்போது படகு நகராமல் நிக்க, துறவி கையசைத்ததும் நகர்தல் போன்றவற்றை தவ வலிமையில் எடுத்துக்கொள்வதா என தெரியவில்லை.
ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு உயிரினமும், அதனை உதவிக்கு கையாளும் விதமும் நுணுக்கம். இறந்த பிறகும் கூட துணியால் முகத்தை மூடிவரும் பெண்ணின் முகத்தை காட்டாதது, தான் செய்த பாவத்தை கழிப்பதற்காக மலை உச்சியில் தன்னை வருத்தி சீடன் வைத்த சிலை என தீர்மானமின்மையை நம்மிடம் கொடுத்துவிடுகிறார்.
உலகம் அதன் போக்கில் இயங்கினாலும் மனிதன் பாவம் செய்வதை நிறுத்த மாட்டான் என கதையை முடிக்கிறார்.
படத்தை மேலும் விலக்கினால் எதையுமே தவிர்க்க இயலாது. படத்தில் புல்பூண்டும் கதை சொல்கிறது, படமும் கதை சொல்கிறது.
#BomYeoreumGaeulGyeoulGeurigoBom #SpringSummerFallWinterandSpring #KimKi
duk