Monday, March 20, 2017

தண்ணீர்

ஒரு துளி தண்ணீர் ஒரு யுகத்தின் தேவை. குடித்து, குளித்து, பாசனம் செய்து, அணைகளில் சேமித்து, உபரியாக கேப்பாரற்று கடலில் கலக்கும் வரை காவிரியும் நமக்குமான உறவு அலாதியானது.

தொழில்துறைகள் வளராத வரை காவிரியும் வீறுகொண்டு பாய்ந்தது, மனிதனின் தண்ணீர் தேவையும் கட்டுக்குள்ளாக இருந்தது. விவசாயம் விடுத்து தொழில்நுட்பத்தை கையில் ஏந்திய உடன் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது.

தற்போது தேவை மட்டும் உள்ளது நீர் ஆதாரம் இல்லை. மக்கள் தொகை பெருகிவிட்டது ஆதலால் தண்ணீர் தேவை அதிகமானது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றே. ஆனால் எந்த ஆறிலும், நதியிலும், சுனையிலும், ஓடையிலும் தண்ணீரே இல்லையே. பாத்திரத்தை ஓட்டை செய்துவிட்டு தண்ணீர் நிற்கவில்லை என்பதில் எவ்வித நியாயமும் இருப்பதாக தெரியவில்லை.

கர்நாடகாவில் பிறந்த நதி என்பதால் அவர்கள் அணை கட்டுகிறார்கள் அதனால் தண்ணீர் வரவில்லை என சொல்பவர்களை OfficeRoomக்கு கூட்டிச்சென்று வெளுக்கவேண்டும், 1920க்கு பிறகு ஏதேனும் அணை கட்டியுள்ளதா தமிழகம்? எத்தனை ஏரிகளை தூர்வாறியுள்ளது? அதுசரி நாங்களே விவசாய நிலங்களை விற்போம் பிறகெப்படி நாங்களே அதை காக்கவியலும்.

சரி நம் மீதுள்ள ஆதங்கத்திற்கு தனியே ஒரு பதிவிட வேண்டும், இப்போது கர்நாடக மக்களை கழுவி ஊத்த வந்துள்ளேன்.



கிட்டத்தட்ட கோடி மக்கள் வாழும் பெங்களூரில் 50% காவிரி நீர் வீணாக்கப்படுகிறது. கொல்கத்தாவிற்கு பிறகு தண்ணீரை வீணாக்குவது இவர்கள்தான்.

50% என்பது மிகப்பெரிய அளவு தண்ணீர், பாதி தமிழ்நாட்டுக்கான தேவை, ஒரு கேரளாவுக்கான தேவை. நான் தினமும் நடந்து செல்லும் பாதையில் தரை கழுவுவதற்காக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் நம் ஊர்களில் தரை கூட்டுவது தான் வழக்கம். மாறாக இங்கே கழுவப்படுகிறது. இது ஒரு வகையான வீணாக்குதல், இது போலவே பல வழிகளில் தண்ணீரின் தேவை அறியாமல் வீணாக்குகிறார்கள்.



தான்போக்கில் சென்றிடமெல்லாம் தண்ணீர் பருகிய காலம் மாறி, அரசே 10ரூபாய்க்கு தண்ணீர் விற்கிறது. காலத்தின் கொடுமைகளில் இதுவும் ஒன்று. நாளை மூன்றாம் உலகப்போரின் மூலதனம் தண்ணீர் தான் என கணிக்கப்படுகிறது.

தண்ணீர் வீணாக்குதல் எளிது, உருவாக்குதல் கடினம்.

Monday, March 13, 2017

இரோம் சானு சர்மிளா

2000மாவது ஆண்டில் மல்லோம் என்னும் ஊரில் ஒரு கவிதாயினி பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறாள் திடீரென ராணுவம் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்துகிறது, அதில் 10 பொதுமக்கள் இறந்துபோகின்றனர். பொதுவாகவே எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் சமூக அக்கறை சற்று அதிகம், AFA(Armed Forces (Special Powers) Act, 1958) மூலம் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் அதன் பின் நடந்த கொடூரங்களை தாளாது, அவ்வூர் மக்களுக்காக தொடங்கிய உண்ணாநிலை, தலைவாரா மற்றும் தன முகத்தை காண விரதம் 16 வருடங்கள் நீடித்தது. இன்று போராடிய அதே மக்களிடம் தோல்வியை சந்தித்து நிற்கிறார்.


இரோம் சானு சர்மிளா - "வாக்களித்த 90 நபர்களுக்கு நன்றி" என சுருக்கமாக தன் கருத்தினை வெளிப்படுத்திவிட்டார். 16 வருடம் யாருக்காக உண்ணாவிரதம் இருந்தோமோ அவர்களே வாக்களிக்கவில்லை என்ற மனக்குமுறல் அளப்பரியது.


பொதுவாகவே நம் நாட்டில் வடக்கு, தெற்கு என பாராமல் நல்லவர்களின் நிலைமை இதுதான். எதுவுமே செய்யாமல் கொழுத்த காசு கண்டு ஓட்டுக்களை விற்று எளிதாக முதலமைச்சர் ஆகிவிடலாம். ஆனால் மக்களுக்காக போராடி, சிறை சென்று, பல இன்னல்களை கடந்து வந்து தேர்தல் களத்தில் நின்றால் விடை இதுதான்.



வரலாறு உங்களை மறக்காது மணிப்பூர் மக்களே.
நல்லவர்களாக இருந்தால் எதையும் மாற்றவியலாது, இனியாவது திருந்துங்கள் நல்லவர்களே. இது மோடி ஆளும் பூமி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நான் சொல்லத் தேவையில்லை.
இதற்குத்தான் ஒரு மகான் அன்றே சொன்னார் "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்" என்று.

Wednesday, March 1, 2017

அப்பா

 
தன் அப்பாவின் கல்லறைக்குழியில் இட்ட
விதை ஒன்று தளிர்விட்டது, மரமாகி
பழம் விட்டது, பறவைகள் உண்ட
பழத்தின் எச்சம் மீண்டும் மரமானது
தற்போது காணும் இடங்களிலெல்லாம்
தன் அப்பா.

என் எழுதப்படாத ஓர் புனைவிலிருந்து.