Tuesday, February 7, 2017

குளிர் பானங்கள்

#BanPepsi #BanCoke மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் #Bovonto வை ஏன் ஆதரிக்கணும்?
அவனும் அதே தாமிரபரணியிலிருந்து தான் தண்ணீர் உறிஞ்சப்போகிறான். செத்தாலும் உள்ளூர் விஷம் குடித்து சாக வேண்டும் என்ற பட்றா? இதை வழிமொழிபவர்கள் பாதிக்கு மேல் வெளிநாட்டு சரக்கை தேடித்தேடி குடிப்பவர்கள் தான்.
அந்நியர்கள் விரட்டப்பட வேண்டுமென்றால் குண்டூசி தொடங்கி விரட்டப்பட வேண்டும். போலவே நம் மக்களும் உணவு தொடங்கி பல வர்த்தகங்களை நாடு கடந்து செய்கின்றனர். சரவணபவன், மதுரை இட்லி என நாமும் பல நாடுகளில் வேரூன்றி உள்ளோம். அவன் நம்மை விரட்டினால்?
கேடு விளைவிக்கும் அந்நிய பொருட்களை தடைசெய்தலே சாலத்தகும். நூடுல்ஸ், சர்க்கரை, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் இவைகளை ஒழுங்கு படுத்துங்கள்.
இயற்கையை நாடுங்கள் அதுவே சிறந்த உணவு.

ஏறுதழுவல்

வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா? உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!
பாரதிதாசனின் வரிகள் இவை. எக்காலத்திற்கும் பொருந்தும்.
இன்று காலை #WeDidJallikattu #JusticeForJallikattu போன்ற HashTag இட்டு கீச்சியவர்கள் யாவரது கீச்சும் வெளியிடப்படவில்லை. மாறாக Duplicate tweet error வந்தது.
எனவே உண்மை எவ்வித ஊடாக சென்றாலும் அதை தடுப்பது மத்திய அரசின் இக்கால மட்டுமல்ல, பலகால பணி.
இதில் என்ன ஒரு கூத்து என்றால் அழியும் தருவாயில் இருந்த ஜல்லிக்கட்டு, சேவல்சண்டை, மாட்டுவண்டி பந்தயம் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சென்றாயிற்று, இனி அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நன்றி PETA (People for the Ethical Treatment of Animals) Narendra Modi
எனவே அவர்களை ஒடுக்கும் ஒரே ஆயுதம் நம்முடைய ஒற்றுமை ஒன்றே. ஒன்றுபடு! எக்காலத்திற்கும்.


#Jallikattu ஒற்றுமையில் நிரூபித்தது மட்டும் போதாது. கலையில், அறிவியலில், இலக்கியத்தில், கலாச்சாரத்தில் என அனைத்திலும் மேலோங்க வேண்டும்.
தொன்றுதொட்டு நம் கலாச்சாரம் தலைசிறந்தது என நாம் மட்டுமே பேசி வருகிறோம், 5000, 4000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் அடையாளங்கள் தென்பட துவங்கியுள்ளன. எனினும் அது உலகம் முழுதும் சென்று சேரவில்லை, இலக்கியம் படைத்தவர்கள், தீர்க்கமுடியாத நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தவர்கள், கலை, அறிவியல் ஞானம் படைத்தவர்கள் யாரும் அதை தாம் மட்டும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கும் போதித்தார்கள்.
2300 ஆண்டுகளுக்கு முன்பே முனிவரொருவர் கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார், 1748 தான் Jacques Daviel என்பவர் first modern European physician to do a eye surgery என தம்பட்டம் அடித்து உலகமே திரும்பி பார்த்தது.
புத்தக, கலை அறிவியல் அறிவை வளர்ப்போம் மீட்டும் ஓர் ஆதித் தமிழினம் செய்வோம்.

பெண் சுதந்திரம்

70ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது நிச்சயம் ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்று. இரவு பத்துமணிக்கு மேல் தனியாக ஒரு பெண் நடந்து செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பது விளக்க இயலாது.
தெரு, சந்துகளில் தான் பெரும்பாலும் வன்புணர்ச்சிகள் இடம்பெறுகிறது. CCTV camera இருந்ததால் இது போன்ற சம்பவம் நடந்தது அனைவருக்கும் தெரிய வந்தது, இல்லையேல் எப்படி இந்த நிகழ்வு நடந்தது புலப்பட்டிருக்கும்? அப்படியெல் இது போன்று கண்காணிக்காமல் எத்தனை நிகழ்வு நடந்திருக்கும்?
கடவுள் போன்று அனைத்து இடங்களிலும் காவலர்கள் கண்காணிக்கவியலாது உண்மை தான், ஆனால் நவயுக கடவுளான CCTV cameraவை முடிந்த வரை இதுபோன்ற இடங்களில் பொருத்தலாம்.
இவை அனைத்தும் தற்காப்பு முறையே, ஆனால் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க என்ன வழி? சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் இளவரசர் Turki Bin Saud Al-Kabirக்கு நிகழ்ந்தது நினைவிருக்கலாம். தண்டனைகள் தான் குற்றங்களை குறைக்கும் என்பது என் கருத்து.



Digital நாடகம்

#Demonetization எவ்வளவு சிறப்பான திட்டம்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றவுடன் வேக வேகமாக வரிசையில் நின்று தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றியவர்கள் யார் தெரியுமா?
இந்நாட்டின் ஏழைகளான அம்பானி, ரத்தன் டாட்டா, அதானி, குமார் பிர்லா, பொன்னவாளா, மிட்டல், ஷிவ் நாடார், பலோன்ஜி, ஆசிம் பிரேம்ஜி, திலிப் ஷங்க்வி, அமிதாப், ரஜினி (ஏன் எதற்கெடுத்தாலும் ரஜினியை உள்ளே இழுக்கிறீர்கள், அவர் என்னதான் செய்தார்? என்று யாராவது என்னை கேளுங்களேன்) இன்னபிற பழம்பெரும் சில்லறைகள்.
மற்றபடி விவசாயம் செய்யும் அன்றாட கூலிகளுக்கு, புதிய நோட்டுகள் அவர்கள் வீடுதேடி கட்டுக்கட்டாக குளியலறைக்கே வந்துவிட்டது.

2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குக்கே அதிகம் வரவில்லை, ஆனால் அதற்குள் Big Bazaar தன்னிடம் 2000 ரூபாய் உள்ளதென்றும் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும், SnapDeal வாடிக்கையாளர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை order செய்து கொள்ளலாம் அதற்கு 1 ரூபாய் service charge எடுத்துக்கொள்வோம் எனவும் அறிவிக்கின்றனர்.

வங்கிகள் செய்யவேண்டிய வேலையை செய்ய இவர்கள் யார்? இவர்களுக்கு எப்படி 2000 ரூபாய் நோட்டுகள் வந்தது? யார் கொடுத்தது இவர்களுக்கு?
இந்தியாவில் பிழைக்க corporateட்டாக இருக்க வேண்டும். விவசாயியாகவோ தினக்கூலியாகவோ இருந்தால் விடை உங்களுக்கே தெரியும்.. வாழ்க ஜனநாயகம்.

Thursday, January 5, 2017

கீச்சுலகம்

குழந்தை:
சிலேட்டின் மூலையில் அருவி வரைய தொடங்கிய குழந்தை, நான்கு கோணத்துக்குள் முடிக்கவியலாமல் இருக்கை வரை நீட்டித்தது. சரி தானே

வழிப்போக்கன்:
அழைபேசியில் ஒருவர் கோபத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது, ஆனால் ஆட்காட்டி விரல் நீட்டி யாரை எச்சரிக்கிறார்?

கடவுள்:
கடவுளை அன்றாடம் கடக்கும் ஒரு வழிப்போக்கனாக கடந்துவிடுங்கள், இல்லையேல் உறவாடி பூஜையறை வரை வந்துவிடுவான்.

காதல்:
இந்த இடம் நினைவிருக்கிறதா? என்றாள் *//அவ்விடத்தின் நினைவுகளை விட்டு நீங்கினால்தானே மறக்கவியலும்?//*
இல்லை என்றேன்.

வாழ்க்கை:

விமர்சனங்களுக்கு பயந்தவர்களின் பெயர்கள் எவ்வரலாற்றிலுமே இடம்பெறவில்லை.

பயணம்:
தன்னியல்பை தொலைப்பவர்க்கே பயணப்படுதல் வரமாகும், ஏனையோர்க்கு பிழைப்பிற்கான இடம்பெயர்தல்

Saturday, October 22, 2016

உலகசினிமா ஓர் பார்வை - Baraka

Baraka - ஆவணப்படம்

ரான் பிரிக்கி இயக்கிய ஆவணப் பேசும் படம். ஹாப்பி மொழியிலிருந்து தழுவப்பட்ட Qatsi(Life) எனும் சொல்லை இது போன்ற படங்களுக்கு சூட்டுகின்றனர். இதற்கு முன் வெளிவந்த Koyaanisqatsi படத்தின் தாக்கத்தை இப்படத்தில் வெகுவாக காணலாம். 70 mm திரைச்சுருளில், 8000UHD பகுத்தலில் உருவான படம். மெதுவாக இயங்கக்கூடிய(slow-motion), காலம் கழிந்த(time-lapse) முறையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
படத்தில் பெரும்பாலும் புனித வழிபாட்டு இடங்கள், வரலாற்றில் சிதைந்த இடங்கள், பல்வேறு பழங்குடி இனத்தின் சடங்குகள் பெருமபான்மையாக கவரப்பட்டுள்ளன, மேலும் சில இயற்கையே உருவான அருவிகள், ஏரிகள் மற்றும் மழைக்காடுகள் கவரப்பட்டுள்ளன.



23 நாடுகளில் 153 இடங்களில் காட்சியமைக்கப்பட்டுள்ளது இப்படம். இவற்றில் பின்வருவன என்னை வெகுவாக பாதித்தவை.

வரலாற்றில் சிறந்த அங்கூர் வாட், வாரணாசி ஈமச்சடங்கு, கெச்சக் எனப்படும் பர்மிய நடனம், கென்ய பழங்குடி இனத்தின் மாசாய் நடனம், பிரேசில் பழங்குடியினரின் காயாபோ நடனம், ஆஸ்திரேலிய தீவான பத்துர்ஸ்ட், இதில் வசிக்கும் டிவி பழங்குடி இனத்தவரின் ஈமச்சடங்கு நடனம்.

அமெரிக்காவில் பார்க்-அவென்யூவின் சமிக்ஞையில் போக்குவரத்தை பதிவு செய்த விதம் இப்படத்தின் படமாக்கலின் மையத்தை உணர்த்துகிறது.

பிரேசில் மலைக்காடுகளில் அறுபடும் ஒற்றை மரம் என் உணர்வுகளை சற்றே அசைத்துப்பார்த்தது. குப்பை பொறுக்கும் வங்காள மக்கள், டான்சானியாவின் நார்ட்டன் ஏரியில் கவிழ்த்துக்கிடந்த வானம்,  வீடில்லாத மக்கள், குவின் எனப்படும் சீன பேரரசின் டெரகோட்டா போர் படையின் சிலைகள், ஈரானின் பெர்சிபோலிஸ் கல் சாம்ராஜ்யம் என நம் வாழ்க்கை முறையின் சமநிலையற்ற நிலையையும், வரலாற்றின் நிரந்தரமற்ற நிலையையும் மனதில் வேரூன்றுகிறது. படத்தில் காண்பித்தவைகளுக்கென்று தனியொரு படமே எடுக்கலாம்.
# RonFricke 

Wednesday, September 14, 2016

குழந்தை வைத்திருப்பவன்!!

குழந்தைகள் என்றால் அனைவருக்குமே விருப்பம், அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை, சில பல முசுடுகளைத் தவிர. அக்குழந்தையை வைத்திருப்பவர்கள் மீது ஒருவித ஈர்ப்பும், பரிதாபமும், ஆசையும் ஒரு சேர தொற்றிக்கொள்கிறது.


குழந்தையின் மொழியை உடனே தெரிந்துக்கொண்டது போன்ற உணர்வாகவும் இருக்கலாம் அக்குழந்தையை நெருங்குவதற்கு. உண்மையில் குழந்தையின் மொழிதான் உலகில் மிகக் கடினமான மொழி, சில சமயம் அம்மாவிற்கும் கூட புரியாது போகும்.

அழும் குழந்தைக்கு பல வேடிக்கை காட்டுகிறார் அதற்குமுன் பரிச்சயப்படாத ஒருவர். அவர் தன் வீட்டில் ஒரு சிடுமூச்சியாக, எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிற ஆளாக கூட இருக்கலாம். ஆனால் அழும் அக்குழந்தை முன்பு தன் இயல்புகளை தொலைத்து வேடிக்கை காட்டுகிறார். முகத்தை சிரித்தாற் போல் வைக்கிறார், கையில் சொடக்கிட்டு விசேட ஒலி எழுப்புகிறார், கன்னத்தை குவித்து பயமூட்டுகிறார், பெற்றோரிடம் வாங்கி சமாதான படுத்துகிறார்.

திருமணமாகாமல் பேருந்திலோ, ரயிலிலோ முன் பதிவு செய்த இருக்கையை கூட விட்டுக்கொடுக்க சொல்கிறார்கள், ஆனால் கைக்குழந்தையை வைத்திருப்பவனை மதிக்கிறார்கள், தானே முன்வந்து இருக்கையை தருகிறார்கள்.

அப்படி என்ன உள்ளது இந்த குழந்தையிடம்? சிறிது நேரம் உடனிருந்தால் மனவேதனையை மறக்கடிக்கிறது, அலங்காரம் ஏதுமின்றி அனைவரையும் ஈர்க்கிறது, எவ்வளவு இறுக்கமான நாளின் நேரத்தையும் கடத்துகிறது, தன் சிரிப்பின் மூலம் ஆசிர்வதிக்கிறது.

ஏதும் அறியாத, அப்பழுக்கற்ற, கவலைகள் இல்லா உள்ளம் என்பதால் அனைவரிடமும் எளிதாக பழக முடிகிறது போலும், வயதான பின்னும் இப்படியே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். என்றுமே குழந்தையாக இருந்துவிட முடியாதே!