Saturday, October 22, 2016

உலகசினிமா ஓர் பார்வை - Baraka

Baraka - ஆவணப்படம்

ரான் பிரிக்கி இயக்கிய ஆவணப் பேசும் படம். ஹாப்பி மொழியிலிருந்து தழுவப்பட்ட Qatsi(Life) எனும் சொல்லை இது போன்ற படங்களுக்கு சூட்டுகின்றனர். இதற்கு முன் வெளிவந்த Koyaanisqatsi படத்தின் தாக்கத்தை இப்படத்தில் வெகுவாக காணலாம். 70 mm திரைச்சுருளில், 8000UHD பகுத்தலில் உருவான படம். மெதுவாக இயங்கக்கூடிய(slow-motion), காலம் கழிந்த(time-lapse) முறையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
படத்தில் பெரும்பாலும் புனித வழிபாட்டு இடங்கள், வரலாற்றில் சிதைந்த இடங்கள், பல்வேறு பழங்குடி இனத்தின் சடங்குகள் பெருமபான்மையாக கவரப்பட்டுள்ளன, மேலும் சில இயற்கையே உருவான அருவிகள், ஏரிகள் மற்றும் மழைக்காடுகள் கவரப்பட்டுள்ளன.



23 நாடுகளில் 153 இடங்களில் காட்சியமைக்கப்பட்டுள்ளது இப்படம். இவற்றில் பின்வருவன என்னை வெகுவாக பாதித்தவை.

வரலாற்றில் சிறந்த அங்கூர் வாட், வாரணாசி ஈமச்சடங்கு, கெச்சக் எனப்படும் பர்மிய நடனம், கென்ய பழங்குடி இனத்தின் மாசாய் நடனம், பிரேசில் பழங்குடியினரின் காயாபோ நடனம், ஆஸ்திரேலிய தீவான பத்துர்ஸ்ட், இதில் வசிக்கும் டிவி பழங்குடி இனத்தவரின் ஈமச்சடங்கு நடனம்.

அமெரிக்காவில் பார்க்-அவென்யூவின் சமிக்ஞையில் போக்குவரத்தை பதிவு செய்த விதம் இப்படத்தின் படமாக்கலின் மையத்தை உணர்த்துகிறது.

பிரேசில் மலைக்காடுகளில் அறுபடும் ஒற்றை மரம் என் உணர்வுகளை சற்றே அசைத்துப்பார்த்தது. குப்பை பொறுக்கும் வங்காள மக்கள், டான்சானியாவின் நார்ட்டன் ஏரியில் கவிழ்த்துக்கிடந்த வானம்,  வீடில்லாத மக்கள், குவின் எனப்படும் சீன பேரரசின் டெரகோட்டா போர் படையின் சிலைகள், ஈரானின் பெர்சிபோலிஸ் கல் சாம்ராஜ்யம் என நம் வாழ்க்கை முறையின் சமநிலையற்ற நிலையையும், வரலாற்றின் நிரந்தரமற்ற நிலையையும் மனதில் வேரூன்றுகிறது. படத்தில் காண்பித்தவைகளுக்கென்று தனியொரு படமே எடுக்கலாம்.
# RonFricke 

Wednesday, September 14, 2016

குழந்தை வைத்திருப்பவன்!!

குழந்தைகள் என்றால் அனைவருக்குமே விருப்பம், அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை, சில பல முசுடுகளைத் தவிர. அக்குழந்தையை வைத்திருப்பவர்கள் மீது ஒருவித ஈர்ப்பும், பரிதாபமும், ஆசையும் ஒரு சேர தொற்றிக்கொள்கிறது.


குழந்தையின் மொழியை உடனே தெரிந்துக்கொண்டது போன்ற உணர்வாகவும் இருக்கலாம் அக்குழந்தையை நெருங்குவதற்கு. உண்மையில் குழந்தையின் மொழிதான் உலகில் மிகக் கடினமான மொழி, சில சமயம் அம்மாவிற்கும் கூட புரியாது போகும்.

அழும் குழந்தைக்கு பல வேடிக்கை காட்டுகிறார் அதற்குமுன் பரிச்சயப்படாத ஒருவர். அவர் தன் வீட்டில் ஒரு சிடுமூச்சியாக, எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிற ஆளாக கூட இருக்கலாம். ஆனால் அழும் அக்குழந்தை முன்பு தன் இயல்புகளை தொலைத்து வேடிக்கை காட்டுகிறார். முகத்தை சிரித்தாற் போல் வைக்கிறார், கையில் சொடக்கிட்டு விசேட ஒலி எழுப்புகிறார், கன்னத்தை குவித்து பயமூட்டுகிறார், பெற்றோரிடம் வாங்கி சமாதான படுத்துகிறார்.

திருமணமாகாமல் பேருந்திலோ, ரயிலிலோ முன் பதிவு செய்த இருக்கையை கூட விட்டுக்கொடுக்க சொல்கிறார்கள், ஆனால் கைக்குழந்தையை வைத்திருப்பவனை மதிக்கிறார்கள், தானே முன்வந்து இருக்கையை தருகிறார்கள்.

அப்படி என்ன உள்ளது இந்த குழந்தையிடம்? சிறிது நேரம் உடனிருந்தால் மனவேதனையை மறக்கடிக்கிறது, அலங்காரம் ஏதுமின்றி அனைவரையும் ஈர்க்கிறது, எவ்வளவு இறுக்கமான நாளின் நேரத்தையும் கடத்துகிறது, தன் சிரிப்பின் மூலம் ஆசிர்வதிக்கிறது.

ஏதும் அறியாத, அப்பழுக்கற்ற, கவலைகள் இல்லா உள்ளம் என்பதால் அனைவரிடமும் எளிதாக பழக முடிகிறது போலும், வயதான பின்னும் இப்படியே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். என்றுமே குழந்தையாக இருந்துவிட முடியாதே!

Wednesday, August 31, 2016

பெண் எனுமோர் மாமருந்து!!

பெண்களைப் போற்றாத, புகழாத கவிஞர்கள் எழுத்தாளர்கள் இதுவரை இருந்ததில்லை, இனி இருக்கப்போவதுமில்லை. இதற்கான காரணம் எதிர்பாலின் மீதுள்ள ஈர்ப்பே, அதுவே நம்மை வாழ உந்துகிறது. ஆனால் இலக்கியங்களுள் பெரும்பான்மையானவை யுவதிகளையே புகழ்ந்து போற்றப்பட்டு வந்திருக்கிறது, ஆணை புகழ்ந்தோ வர்ணித்தோ வெளிவந்த படைப்புகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.



இங்கே அப்படி சிலவற்றை வர்ணித்துள்ளேன்.

வெளியே நின்று ஒரு பெண் அழுகிறாள். இவ்வளவு அழகான பெண்ணைக்கூட கஷ்டப்படுத்தி வேதனை கொள்ள வைப்பது யார்?

ஒரு பெண் தரும் முத்தத்திற்கு ஈடு, இன்னொரு பெண் தரும் முத்தம்.

இரவிற்கான தனிமை, தனிமைக்கான பெண். நான் மட்டும் பரவும் நிழலில் அவ்விரவின் உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறேன்.

பட்டியிலிருந்து விடுபட்ட ஆடுகளின் மனநிலையை ஒத்ததாய் கட்டற்ற சிந்தனையில் லயிக்கிறது பெண்ணைப் பற்றிய ஆணின் வர்ணனைகள்.

ஒரு பெண் உன் முன் கூச்சமின்றி அழத்தொடங்கிவிட்டால் அவள் மனதில் நீ நிரந்தர இடம் பிடித்துவிட்டாய் எனப் பொருள்.

போதைகள் என்று தனியே ஏதும் இல்லை, பழகும் அனைத்தும் போதையே. தலையாயது பெண்.

ஆண் தன்னை பார்க்கிறான் என தெரிந்ததும் காதோரம் உள்ள முடியை சரி செய்வது போல் அவனை ஓரக்கண்ணால் பார்க்கும் பெண் வாழ்வை அழகாக்கிச் செல்கிறாள்.

இவ்வளவு காதல் கவிதைகளையும் தீண்டல்களையும் ஆண் பெண்ணிடமோ பெண் ஆணிடமோ நிஜ வாழ்க்கையில் எதிர்பார்ப்பது தவறு.

ஏதோ ஒரு வக்கிரத்தை கொட்டித் தீர்க்கும் உறவின் எல்லையாய் உள்ளது பலருக்கு பெண் நட்பு.

தோன்றும் வக்கிரங்களை அவன் காதில் கிசுகிசுக்கிறாள், "பெண்கள் ஒருபோதும் சளைத்தவர்கள் அல்ல" என அடிக்கடி அவள் சொல்வதை நினைவுகூர்கிறான்.

பெண்கள் ஒப்பனை இல்லாமல் வெளியில் வந்தால், ஆணின் ரசனை மாறத்தொடங்குமோ என்னவோ.

படியவாரி பூச்சூடிய பெண்கள் ஒரு வகை அழகென்றால், காற்றிலலையும் குதிரைவால்கள் இன்னொரு வகை அழகு.

பெண்கள் தங்கள் தோழிகள் மீதும் சுயநலமாகத்தான் உள்ளனர்

Saturday, August 20, 2016

நான் கண்ட உலக சினிமா ஒரு பார்வை !!

கலை எப்போதுமே ஒரு மனிதனை பரவசத்தில் ஆழ்த்தக்கூடியது. யதார்த்தத்தின் வேர்கள் முழுதும் பரவிக்கிடக்கிறது என்பதால் எனக்கு மிக நெருக்கம், அக்கலைகளுள் கூத்து இன்னும் நெருக்கம். எளிதாய் காணக்கிடைக்கிறது என்பதாலோ என்னவோ கூத்தின் நவநாகரிக பதிப்பான சினிமாதான் தற்போது என் தற்காலிகக் கூடாரம்.
சினிமா என்றதும் உங்கள் அபிமான நாயகர்களை கனவில் கொல்லாதீர்கள், இது முழுக்க முழுக்க யதார்த்த சினிமா, நான் கண்ட உலக சினிமா ஒரு பார்வை.

இங்கே எதையும் நான் ஒன்று இரண்டு என வரிசைப்படுத்தவில்லை...

1. Timbuktu

Mauritanian மொழியில் வெளிவந்த படம். வடக்கு ஆப்ரிக்க பாலைவனமாக்கலை, சுதந்திரம், வறுமை, தீவிரவாதம், கட்டுப்பாடு அனைத்தும் ஒருசேர தந்துள்ளனர். சந்தேகமே வேண்டாம் நாம் வாழும் வாழ்க்கை கொடுத்துவைக்கப்பட்டது, சுதந்திரத்தின் வலி இதுதான் என உணரவைக்கக்கூடிய படம்.



2. Relatos Salvajes

Spanish மொழியில் ஆறு சிறு கதைகளாய் வெவ்வேறு களங்களில் பல்வேறு கலைஞர்களை வைத்து அமர்க்களப் படுத்தியிருக்கிறார்கள்.




3. Carandiru

 Estação Carandiru புத்தகத்தை வைத்து வெளிவந்த Brazil மொழி படம். 1992ல் 111 சிறைக்கைதிகள் படுகொலை செய்யப்பட்டதை பற்றி அலசும் ஒரு படம்.




4. Embrace of the Serpent

Spanish மொழி படம். அமேசான் காட்டின் செல்வங்களை சுரண்டுவதை பற்றியும், நாகரீகமயமாக்கல் எவ்வாறு இயற்கையை விட்டு வெகுதூரத்திற்கும், பிறப்புரிமை மற்றும் தன் உரிமைகள் தொலைவது பற்றியும் அலசுகிறது.


5. Failan

Korean சினிமா. ஜப்பானிய Jirō Asada புத்தகத்தின் தழுவல் இப்படம். காதல் தானாக அமையும் யதார்த்தம் அழகு.



6. Heidi

Swiss-German மொழியின் கலவையில் வெளிவந்துள்ளது. ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள், அந்த குழந்தையும் அவரது ஆடு மேய்க்கும் தாத்தாவையும் பற்றிய தரமான ஒரு படம்.



7. Le Gamin au vélo

தந்தையால் கைவிடப்பட்டு நட்புக்காக ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கும் சிறுவனைப் பற்றிய French மொழி படம்.



8. The Last Station

Leo Tolstoyயின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு தொகுப்பு. அவரது கடைசி நாட்களை படமாக்கியுள்ளனர். The Last Station புத்தகத்தின் தழுவலே இப்படம்.




9. La Jetée

கால பயணம் பற்றிய விஞ்சானத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்த French/German மொழி படம். பின்னாளில் இப்படத்தை மையமாக வைத்து வெளிவந்த படங்கள் ஏராளம்.





10. Diarios De Motocicleta

Spanish மொழி படம். சேகுவேராவின் வாழ்க்கையின் ஒரு தொகுப்பு இப்படம், அவர் இளம் வயதில் அவர் மேற்கொண்ட பயணம் பற்றிய படம். இப்படத்தை பார்த்து இதே போல் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.


Thursday, July 21, 2016

விசாலினி ரமணி - Ola cab விவகாரம்

விசாலினி ரமணி - Ola cab விவகாரம் பற்றி விசாலினியின் முகநூல் பக்கத்தில் வாசித்தேன்.
இரவு பத்து மணிக்கு அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் இறக்கிவிட்டவருக்கு தவறான நோக்கம் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு, போலவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது விதி என்பதால், அவர் மது அருந்தி தன்னை மீறுவதற்கான வாய்ப்பில்லை. இங்கு ஓட்டுநரை குறைக்கூற அவர் தகாத வார்த்தைகளையும் உபயோகிக்கவில்லை.
தற்போதுள்ள சூழ்நிலையில் "கழுத்தை அறுத்துடுவேன், தெரியுமா?" என ஒரு பெண்ணை மிரட்டுவது கண்டிக்கப்பட வேண்டியது. நாள் முழுதும் பல வாடிக்கையாளர்களை சந்தித்து இரவு ஓய்வுக்கான நேரம் நெருங்குகையில் சிலர் "அரசு ஊழியர்களின்" மனநிலையில் இருப்பது வாடிக்கை, மேலும் பயணத்திற்கான தொகையைத் தர மறுத்ததாலும் சற்று ஆவேசத்துடன் ஓட்டுநர் அவ்வாறு கூறியிருக்கலாம்.
"பொறுக்கி" என ஓட்டுனரை அப்பெண்மணி தன் சமூக வலைதளப் பதிவில் திட்டுவதை தவிர்த்திருக்கலாம்.
அதற்கு வினையாய், ஓட்டுனரை சிறைக்கு அனுப்பி, அவர் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கியது மிக மிக அதிகம், அனாவசியம்.

ஆம்! இனி பூமி வாழ்வதற்கு இல்லை.

பசி உயிரைக் கொல்லும், கதிரவன் தன்னால் இயன்ற வரை சுட்டெரிப்பான், இளைப்பாற நிழல் தரும் மரங்கள் வெட்டுண்டு வேர்களில் அமிலம் ஊற்றப்பட்டிருக்கும்.
பறப்பன, ஊர்வன, மிதப்பன என அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கும் நடப்பனவற்றில் மனிதன் மட்டும் இருப்பான்.
தாகம் எடுக்கும், தண்ணீருக்காக நாவும், தொண்டையும் வெளி வந்து ஈரப்பதம் தேடி அலையும். அள்ளி அள்ளிப் பருக கானல் நீர் கடல் போல் ஊரெங்கும் பரவிக்கிடக்கும், தாகம் மட்டும் குறையாது.
பெருநிறுவன வளாகங்கள் அதோ கண்ணுக்கெட்டிய தூரத்தில் தான் இருக்கும். ஊர்ந்து பொய் குடிக்கத் தண்ணீர் கேட்டால் குடிக்க பெப்சி கொடுப்பான், விலையாக வாழும் நிலத்தை மட்டும் கேட்பான். இறப்பது மட்டுமே நிம்மதியைத் தரும்.

ஆம் இனி பூமி வாழ்வதற்கு இல்லை.

Wednesday, May 25, 2016

வலிமிகும் அரவணைப்பு!!!

அனாதையாகப் பிறந்த எவ்வுயிரியாய் இருந்தாலும் நிச்சயம்மாக உங்களால் அதற்கு ஆதரவுத் தந்து நல்ல முறையில் வளர்க்க இயலும், அனால் ஒருபோதும் அவ்வுயிரித் தன் தாயிடம் கற்பது போல் தன் இனத்திற்கே உரித்தானக் குணாதிசயங்களை உங்களால் ஒருபோதும் கற்பிக்க இயலாது, இதுவும் படைப்பின் மறைபொருளே.

Wednesday, May 18, 2016

சிந்தனைக் கொலை !!!

இதுவரை எந்த உயர் மதிப்பெண்ணும் நாட்டையோ நாட்டு மக்களையோ வழிநடத்தியது இல்லை. எந்த அதிக மதிப்பெண் எடுத்தவரும் இலவசமாக கல்வியையோ, மருத்துவத்தையோ வழங்கியது இல்லை. புத்தகத்தை விழுங்கி வாந்தி எடுப்பதற்கு பெயர் தான் கல்வி, இக்காலத்து மாணவர்கள் xerox மெசின்கள். இன்று நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள், தான் மருத்துவராகி ஏழை மக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்க கனவு காணும் நாள் மட்டுமே.

மதிப்பெண்கள் நல்ல மனிதரை உருவாக்காது, போராடி வாழ்பவனுக்கே வாழ்க்கை தன் தேடல்களுக்கான விடைகளை வைத்துள்ளது.

நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டாமென்று சொல்லவில்லை, அவர்கள் தான் நாட்டின் வளர்ச்சிக்கான முதுகெலும்பு என்னும் எண்ணத்தை மாற்றவேண்டும் என்கிறேன்.