Wednesday, September 14, 2016

குழந்தை வைத்திருப்பவன்!!

குழந்தைகள் என்றால் அனைவருக்குமே விருப்பம், அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை, சில பல முசுடுகளைத் தவிர. அக்குழந்தையை வைத்திருப்பவர்கள் மீது ஒருவித ஈர்ப்பும், பரிதாபமும், ஆசையும் ஒரு சேர தொற்றிக்கொள்கிறது.


குழந்தையின் மொழியை உடனே தெரிந்துக்கொண்டது போன்ற உணர்வாகவும் இருக்கலாம் அக்குழந்தையை நெருங்குவதற்கு. உண்மையில் குழந்தையின் மொழிதான் உலகில் மிகக் கடினமான மொழி, சில சமயம் அம்மாவிற்கும் கூட புரியாது போகும்.

அழும் குழந்தைக்கு பல வேடிக்கை காட்டுகிறார் அதற்குமுன் பரிச்சயப்படாத ஒருவர். அவர் தன் வீட்டில் ஒரு சிடுமூச்சியாக, எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிற ஆளாக கூட இருக்கலாம். ஆனால் அழும் அக்குழந்தை முன்பு தன் இயல்புகளை தொலைத்து வேடிக்கை காட்டுகிறார். முகத்தை சிரித்தாற் போல் வைக்கிறார், கையில் சொடக்கிட்டு விசேட ஒலி எழுப்புகிறார், கன்னத்தை குவித்து பயமூட்டுகிறார், பெற்றோரிடம் வாங்கி சமாதான படுத்துகிறார்.

திருமணமாகாமல் பேருந்திலோ, ரயிலிலோ முன் பதிவு செய்த இருக்கையை கூட விட்டுக்கொடுக்க சொல்கிறார்கள், ஆனால் கைக்குழந்தையை வைத்திருப்பவனை மதிக்கிறார்கள், தானே முன்வந்து இருக்கையை தருகிறார்கள்.

அப்படி என்ன உள்ளது இந்த குழந்தையிடம்? சிறிது நேரம் உடனிருந்தால் மனவேதனையை மறக்கடிக்கிறது, அலங்காரம் ஏதுமின்றி அனைவரையும் ஈர்க்கிறது, எவ்வளவு இறுக்கமான நாளின் நேரத்தையும் கடத்துகிறது, தன் சிரிப்பின் மூலம் ஆசிர்வதிக்கிறது.

ஏதும் அறியாத, அப்பழுக்கற்ற, கவலைகள் இல்லா உள்ளம் என்பதால் அனைவரிடமும் எளிதாக பழக முடிகிறது போலும், வயதான பின்னும் இப்படியே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். என்றுமே குழந்தையாக இருந்துவிட முடியாதே!